படப்பிடிப்பில் தூங்கிய ரஜினி!.. பதறிப்போன படக்குழு!.. எந்த படத்தில் தெரியுமா?...
சினிமா படப்பிடிப்பை பொறுத்தவரை சில நடிகர்கள் சொன்ன நேரத்திற்கு வந்துவிடுவார்கள். சில நடிகர்கள் எல்லோரும் வந்த பின்னும் வரமாட்டார்கள். படப்பிடிப்புக்கு தாமதமாக வரும் நடிகர்களில் சிம்பு, கார்த்திக், பிரகாஷ் ராஜ் என பெரிய பட்டியலே உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் ‘நாளை காலை 6 மணிக்கு வந்து விடுங்கள்’ என இயக்குனர் சொல்லிவிட்டால் 6 மணிக்கு மேக்கப்புடன் தயாராக இருப்பார்.
சிவாஜியை பின்பற்றுபவர்தான் நடிகர் ரஜினி. ‘அவ்வளவு பெரிய நடிகர்.. அவரே நேரத்திற்கு வரும்போது. நாமெல்லாம் யார்?’ என நினைக்கும் நடிகர்தான் ரஜினி. மறைந்த நடிகர் மனோபாலா இயக்கிய திரைப்படம் ‘ஊர்க்காவலன்’. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் மைசூரில் நடந்தது.
ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. எனவே, ‘காலை 7 மணிக்கெல்லாம் வந்துவிடுங்கள்’ என ரஜினியிடம் தயாரிப்பு நிர்வாகி கூறிவிட்டாராம். ரஜினியும் காலை சீக்கிரம் எழுந்து அவர் சொன்னது போல 7 மணிக்கு அந்த இடத்திற்கு வந்துவிட்டாராம். ஆனால், அங்கு படப்பிடிப்பு குழுவினர் ஒரு கூட வரவில்லையாம். அந்த இடம் நல்ல இயற்கையான மரங்கள் சூழ்ந்த இடம் என்பதால் ரஜினி ஒரு இடத்தில் அப்படியே படுத்து தூங்கிவிட்டாராம்.
அதன்பின்னரே படக்குழு அங்கே வந்துள்ளனர். ரஜினி தூங்கி கொண்டிருந்ததை பார்த்து பதறிப்போன படக்குழு அவரை எழுப்பி அவரிடம் மன்னிப்பு கேட்டார்களாம். ‘சினிமாவில் இதெல்லாம் சகஜம்’ என ஈசியாக எடுத்துக்கொண்ட ரஜினி பாடலை எடுக்க தாயார் ஆனாராம். அப்படி எடுக்கப்பட்ட பாடல்தான் ‘மாசி மாசம்தான்.. கெட்டி மேளதாளம்தான்’ பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.