பொது மேடையில் ஜெயலலிதாவை பிளான் போட்டு திட்டிய ரஜினிகாந்த்… அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள்… இப்படியெல்லாம் நடந்திருக்கா??
நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசனுக்கு 1995 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அரசின் மிகவும் புகழ்பெற்ற செவாலியே விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழா அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ஸ்ரீதேவி, சரத்குமார், மீனா, மம்முட்டி, சிரஞ்சீவி, தேவ் ஆனந்த் என இந்திய திரைப்பட உலகின் நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விருது விழா நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சிவாஜி கணேசனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அதன் பின் தகுந்த சிகிச்சை பெற்று உடல் நிலை தேறிய பிறகுதான் அவ்விருது விழாவில் கலந்துகொண்டார்.
அவ்விழாவில் சிவாஜிக்கு பிரான்ஸ் அரசின் தூதரால் செவாலியே விருது வழங்கப்பட்டது. அதன் பின் பலரும் சிவாஜியின் நடிப்பை குறித்து புகழ்ந்து பேசினர். அந்த விழாவில் சிவாஜியை பாராட்டி பேசுபவர்களின் பட்டியலில் ரஜினிகாந்த்தின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் ரஜினிகாந்த் வேண்டுமென்றே தான் நன்றியுரையில் பேசுவதாக கூறினாராம்.
அதன்படி அவ்விழாவில் கலந்துகொண்ட பலரும் பேசிய பிறகு இறுதியாக நன்றியுரை நிகழ்த்த வந்தார் ரஜினிகாந்த். அப்போது ரஜினிகாந்த், சிவாஜி கணேசனின் உடல் நலனுக்காக நாம் அனைவரும் சில நிமிடங்கள் எழுந்து நின்று பிரார்த்திப்போம் என கூறினாராம்.
உடனே அவ்விழாவில் கலந்துகொண்ட அனைவரும் பிரார்த்தனைக்காக எழுந்து நின்றார்களாம். மேடையில் அமர்ந்திருந்தவர்களில் ஜெயலலிதா முதற்கொண்டு ரஜினிகாந்த்தின் சொல் கேட்டு எழுந்து நின்றாராம்.
அதன் பின் பேசத்தொடங்கிய ரஜினிகாந்த் மேடையில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவைப் பார்த்தவாறே “நான் இப்போது மிகவும் டென்சனாக இருக்கிறேன். நீங்கள் திறந்து வைத்தீர்களே பிலிம் சிட்டி. அதை திறந்து வைத்தபோதே சிவாஜி சாரை நீங்கள் கௌரவப்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் அதனை செய்யவில்லை. நீங்கள் சிவாஜியை மதிக்கவில்லை.
நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு. தவறு செய்வது மனிதகுணம். தவறை திருத்திக்கொள்வது மனித்தனம்” என பேசினாராம். இதனை கேட்டு அங்கே அமர்ந்திருந்தவர்கள் பலரும் அதிர்ந்து போனார்களாம்.
மேலும் பேசிய ரஜினிகாந்த் “ஆனால் நீங்கள் இப்போது சிவாஜிக்கு இப்படி ஒரு பிரம்மாண்டமான விழா நடத்தியது மட்டுமல்லாது இந்த விழாவில் பங்குகொண்டதன் மூலம் அந்த தவறை சரி செய்துகொண்டீர்கள். தவறு எங்கு நடந்தாலும் நான் சுட்டுக்காட்டுவேன். அது ஒரு குடிமகனின் உரிமை. ஒரு நடிகன் என்ற முறையில் அந்த உரிமை எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது” எனவும் கூறினார்.
ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது தற்செயல் அல்ல எனவும், மிகவும் திட்டமிட்டு பேசியதாக தெரிய வந்ததாகவும் இந்த சம்பவத்தை பகிர்ந்த சினிமா பத்திரிக்கையாளரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.