கடுமையான காய்ச்சலிலும் படப்பிடிப்பை நிறுத்தாத ரஜினிகாந்த்.. பதறிப்போன படக்குழுவினர்…
ரஜினிகாந்த் தற்போது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் என்பதை நாம் தனியாக கூறத்தேவையில்லை. ரஜினிகாந்தின் இந்த உச்சத்துக்கு அவரின் பெருந்தன்மையான பண்புதான் காரணம் என பலரும் கூறுவார்கள். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை மதிப்பதில் மட்டுமன்றி பலருடைய திறமைகளை பாராட்டும் குணாதிசயமும் அவரது சிறப்புகள் ஆகும்.
தமிழ் சினிமாவில் எந்த முக்கிய படைப்பாக இருந்தாலும், அப்படைப்பாளிகளை நேரில் அழைத்து பாராட்டக்கூடிய மிக பரந்த மனதுடையவர் ரஜினிகாந்த். அதுமட்டுமல்லாது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதில் மிகவும் கவனத்தோடு இருப்பாராம்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கலைப்புலி எஸ்.தாணு, கடும் ஜுரத்திலும் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொண்டது குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்சிகா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “கபாலி”. இத்திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ்.தாணு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடையே ஒரு நாள் ரஜினிகாந்திற்கு கடும் ஜுரம் இருந்ததாம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கலைப்புலி தாணுவை தொடர்புகொண்டு, தனது தந்தையை மருத்துவ பரிசோதனைக்காக வரச்சொல்லுமாறு கூறினாராம். ஆதலால் அன்று படப்பிடிப்பை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தார் தாணு. அதன் படி தாணு, பா.ரஞ்சித்திடம் “படப்பிடிப்பை நிறுத்துவிட்டு ரஜினி சார்-ஐ வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள். மற்றொரு நாள் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்” என கூறினாராம்.
பா.ரஞ்சித் இந்த விஷயத்தை ரஜினிகாந்திடம் கூறியிருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த், “என்னால் படப்பிடிப்பை பாதியிலேயே விட்டுட்டு போகமுடியாது. ஒரு நாள் படப்பிடிப்பு நின்னுப்போச்சுன்னா தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா?” என கூற, அதற்கு பா.ரஞ்சித், “தயாரிப்பாளர்தான் படப்பிடிப்பை நிறுத்தச்சொன்னதே” என்று பதிலளித்தாராம்.
அதற்கு ரஜினிகாந்த், “அவர் அப்படித்தான் கூறுவார். ஆனால் ஒரு நடிகனாக தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கமாட்டேன்” என்று கூறி அப்படப்பிடிப்பில் மீண்டும் நடிக்கத் தொடங்கினாராம் ரஜினிகாந்த்.
இதையும் படிங்க: பாபநாசம் படத்தில் ரஜினி!… சூப்பர் ஸ்டாரே ஆசைப்பட்டும் நடக்கலை… ஏன் தெரியுமா?