மாறு வேடத்தில் இயக்குனருடன் ஊர் சுற்றிய ரஜினிகாந்த்… என்ன இப்படி எல்லாம் பண்ணிருக்காரு!
தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே ரஜினிக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அவர் எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு செல்கிறாரோ அங்கெல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். ரஜினிகாந்தின் கரிஷ்மா அந்தளவுக்கு வேலை செய்யும். ஆதலால்தான் இப்போதும் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த்.
மனநிலை பாதிப்பு
இவ்வாறு ஒரு அபரிமிதமான புகழ் இருப்பதால் சாதாரண மனிதர்களை போல் அவரால் வெளியே சென்று வரமுடியாது. ரஜினிகாந்த் மிகப் பெரிய நடிகராக வளர்ந்து வந்தபோது அவருக்கிருந்த அபரிமிதமான புகழால் அவரது மனநிலை கூட பாதிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விழாவில் கூட, “என்னால் சாதாரணமாக வெளியே சென்று வரமுடிவதில்லை என்பது மிகப்பெரிய வருத்தமான விஷயமாக இருக்கிறது” என்று மிகவும் ஏக்கத்தொடு கூறியிருந்தார்.
ஆதலால் ரஜினிகாந்த் எப்போதும் மாறு வேடத்தில் ஊர் சுற்றுவது வழக்கம். இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தை சுற்றிப்பார்க்க நினைத்தால் மாறு வேடமிட்டு மக்களோடு மக்களாக ஊர் சுற்றுவார் ரஜினிகாந்த். அப்படி ஒரு முறை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் ஊர் சுற்றிய சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.
வெள்ளை தாடி முதியவர்
“சந்திரமுகி” திரைப்படம் உருவாவதற்கு முன்பு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் “ஜக்குபாய்” என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்தார். அத்திரைப்படம் பாதியிலேயே நின்றுபோனது. அத்திரைப்படம் உருவாகி வந்த சமயத்தில் அத்திரைப்படத்திற்கான டிஸ்கஷனை பெங்களூரில் வைத்துக்கொள்ளலாம் என ரஜினிகாந்த் கூறிவிட்டு அவர் முதலிலேயே பெங்களூர் சென்றுவிட்டாராம்.
அதன் பின் கே.எஸ்.ரவிக்குமார் பெங்களூருக்கு சென்று ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். ஒரு நாள் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு தொடர்புகொண்டு, “நான் உங்கள் ஹோட்டலுக்கு வெளியேதான் இருக்கிறேன். வாருங்கள்” என கூறியிருக்கிறார்.
உடனே ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வந்த கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த்தின் காரை தேடி இருக்கிறார். ஆனால் எங்கும் தென்படவில்லை. அப்போது அவருக்கு பின்னால் கையில் தடி வைத்துக்கொண்டு முகத்தில் வெள்ளை தாடியுடன் ஒரு முதியவர் வந்து அவரை தொட்டிருக்கிறார். அவர் திரும்பி பார்த்தவுடன் யார் இந்த முதியவர் என முதலில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது அந்த முதியவர், “ரவிக்குமார் சார். நான்தான் ரஜினி. அப்படியே என் கூடவே வாங்க” என கூறியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஷாக் ஆகிவிட்டதாம். அதன் பின் ஒரு ஆட்டோவை பிடித்த ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமாருடன் ஊர் சுற்ற தொடங்கினாராம்.
பல நெரிசலான தெருக்களில் கூட இருவரும் சுற்றிக்கொண்டிருந்தார்களாம். யாருமே அவரை கண்டுபிடிக்கவில்லையாம். அதன் பின் சிறிது நேரம் கழித்து ரஜினிகாந்த், தன்னுடைய சகோதரரின் வீட்டிற்கு ரவிக்குமாரை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே ரஜினிகாந்தும் கே.எஸ்.ரவிகுமாரும் தரையில் அமர்ந்து திருப்தியாக சாப்பிட்டார்களாம். அதன் பின் அங்கே இருவரும் அமர்ந்து “ஜக்குபாய்” படத்திற்கான டிஸ்கஷனை தொடங்கியிருக்கிறார்கள்.