ரஜினிகாந்த் “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். ரஜினியின் முதல் நாள் ஷூட்டிங் எப்படி இருந்தது? அப்போது அவரின் மனநிலை என்னவாக இருந்தது என்பது குறித்து கொஞ்சம் பார்க்கலாம்.
படப்பிடிப்பிற்கு முந்தைய நாள் இரவு, அறையில் தன்னுடன் வசித்து வந்த நண்பரிடம் “காலை 5 மணிக்கே பாலச்சந்தர் ஆஃபீஸ்ல இருந்து கார் வந்திடும். அதனால 4 மணிக்கே என்னைய எழுப்பிவிட்டிடு” என கூறிவிட்டுத்தான் படுத்தாராம். ஆனால் ரஜினிகாந்த்துக்கு அன்று தூக்கமே வரவில்லையாம். காலையில் நடக்க இருக்கும் படப்பிடிப்பை குறித்தே நினைத்துக்கொண்டிருந்தாராம். ரஜினி அன்று இரவு எப்போது தூங்கினார் என்று அவருக்கே தெரியாதாம்.
அறையில் தங்கியிருந்த நண்பர் காலை 4 மணிக்கே எழுப்பிவிட குளித்துவிட்டு படப்பிடிப்பிற்கு தயாரானார் ரஜினிகாந்த். தன்னை அழைத்துப் போவதற்கு கார் வருகிறதா ? என தான் தங்கியிருந்த ஹோட்டலின் மாடிக்குச் சென்று பார்த்துக்கொண்டே இருந்தாராம் ரஜினி.
ஆனால் வெகுநேரம் ஆகியும் கார் வரவில்லையாம். ஆதலால் மிகவும் பதற்றத்துடன் இருந்தாராம். கிட்டத்தட்ட 7 மணி ஆன பிறகுதான் காரே வந்ததாம். காரை பார்த்ததும் மாடிப்படியில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்தாராம்.
காருக்குள் ஏறியவுடன் அந்த கார் பாலச்சந்தரின் ஆஃபீஸ்க்கு சென்றது. அங்கே ரஜினிகாந்த்தை வரவேற்ற கதாசிரியர் அனந்து, ரஜினிகாந்த் பதற்றமாக இருப்பதை பார்த்தாராம். “ஏன் பதற்றமாவே இருக்க, தைரியமா இரு” என்று ரஜினிகாந்த்துக்கு ஆறுதல் கூறினாராம்.
அப்போது சரியாக எட்டு மணிக்கு கமல்ஹாசன் பாலச்சந்தரின் அலுவலகத்துக்குள்ளே நுழைந்தாராம். அவரை பார்த்ததும் ரஜினிகாந்த் அசந்துப்போனாராம். “ஹாய், ஐ யம் சிவாஜி ராவ். நீங்க நடிச்ச சொல்லத்தான் நினைக்கிறேன் படம் பார்த்தேன். ரொம்ப பிரமாதமா நடிச்சிருந்தீங்க” என கமல்ஹாசனை பாராட்டினாராம் ரஜினிகாந்த். கமல்ஹாசன் சிரித்தபடியே ரஜினியின் பாராட்டை ஏற்றுக்கொண்டாராம்.
அதன் பின் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அனந்து ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றார்களாம். “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது. ஒரு கிழிந்த கோர்ட்டை ரஜினிகாந்த்துக்கு மாட்டிவிட்டார்கள். அதே போல் ஒரு ஒட்டு தாடியும் ஒட்டப்பட்டது.
“நான்தான் பைரவியோட புருஷன்”, இதுதான் பாலச்சந்தர் ரஜினிக்கு சொல்லிக்கொடுத்த முதல் வசனம். இந்த வசனத்தை 100 முறையாவது அப்போது சொல்லிப்பார்த்திருப்பாராம் ரஜினிகாந்த்.
அதன் பின் ரஜினிகாந்த் கேட்டை திறந்து வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. வருங்கால தமிழ் சினிமாவையே ஆட்டிவைக்கப்போகும் நடிகர் சினிமாவின் கேட்டைத் திறந்து அடியெடுத்து வைப்பதற்கான சம்பவமாக அமைந்தது அது. அதன் பின் திக்கித்திண்றி ஒரு வழியாக அந்த வசனத்தை சொல்லிமுடித்தாராம் ரஜினிகாந்த். பின்னாளில் தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ரஜினிகாந்த்தின் முதல் நாள் படப்பிடிப்பு இவ்வாறுதான் இருந்திருக்கிறது.
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…
Pushpa 2:…