கேமியோ ரோலுக்கு வந்த ரஜினிகாந்தை ஹீரோவாகவே ஆக்கிய பிரபல இயக்குனர்… பக்கா பிளான்!!
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வந்த காலத்தில் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அவ்வாறு மிகவும் பிசியாக இருந்த காலத்தில் வெளிவந்த திரைப்படம்தான் “குரு சிஷ்யன்”.
ரஜினிகாந்த், பிரபு, சீதா, கௌதமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த “குரு சிஷ்யன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். பஞ்சு அருணாச்சலம் இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார்.
பஞ்சு அருணாச்சலத்திற்கு ரஜினிகாந்த் மிகவும் நெருக்கமானவர். பஞ்சு அருணாச்சலத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ரஜினிகாந்த் ஒரு நாள் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் வந்து “பஞ்சு அருணாச்சலத்திற்கு ஒரு படம் பண்ணலாம் என நினைக்கிறேன். ஆனால் முழு திரைப்படத்தில் நடிக்கும் அளவுக்கு என்னிடம் கால்ஷீட் இல்லை.15 நாட்கள் கால்ஷீட் தருகிறேன். நீங்கள் என்னை கௌரவ தோற்றத்தில் பயன்படுத்தி ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியுமா?” என கேட்டாராம்.
அதற்கு பதிலளித்த எஸ்.பி.முத்துராமன் “நீங்கள் கௌரவ வேடத்தில் நடிப்பதால் பஞ்சு அருணாச்சலத்திற்கு எந்த பயனும் இல்லை. அந்த படமும் வெற்றி அடையாது. ஆதலால் 15 நாட்களோடு சேர்த்து இன்னும் பத்து நாட்கள் கூடுதலாக கால்ஷீட் தந்தால், அதற்குள் ஒரு திரைப்படத்தை உருவாக்கி விடுவேன்” என கூறினாராம்.
“25 நாட்களுக்குள் உங்களால் முழுத்திரைப்படத்தை உருவாக்கிவிட முடியுமா? ஏனென்றால் 25 நாட்களுக்கு மேல் ஒரு நாள் கூட என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது” என ரஜினிகாந்த கூற, “நீங்கள் முதலில் 25 நாட்கள் கால்ஷீட்டை கொடுங்கள். அதற்குள் முடிக்க முடியவில்லை என்றால் என்னை ஏன் என்று கேளுங்கள்” என பதிலளித்தாராம் முத்துராமன். இவ்வாறு ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க வந்து அதன் பின் ஹீரோவாக ஆன திரைப்படம்தான் “குரு சிஷ்யன்”.
இதில் ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால். ரஜினிகாந்த் கொடுத்த 25 நாட்கள் கால்ஷீட்டில் 23 நாட்களை மட்டுமே பயன்படுத்தி திரைப்படத்தை உருவாக்கிவிட்டாராம் எஸ்.பி.முத்துராமன்.