Cinema News
ஷூட்டிங் ஸ்பாட்டில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த பெண்… யார்ன்னு தெரிஞ்சதும் மிரண்டுப்போன இயக்குனர்… “சார் நீங்களா?”
“வேலை”, “என்னவளே”, “ஜூனியர் சீனியர்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஜெ.சுரேஷ். இவர் தற்போது குக் வித் கோமாளி புகழை வைத்து “ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தொடக்கத்தில் விளம்பர பட இயக்குனராக இருந்த ஜெ.சுரேஷ் மெல்ல மெல்ல வளர்ந்து திரைப்பட இயக்குனராக வளர்ந்தார். யுவன் ஷங்கர் ராஜாவுடன் மிக நெருக்கமான நட்பு கொண்டவராக இருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் ஜெ.சுரேஷ், பள்ளி பருவத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்தது குறித்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஜெ.சுரேஷின் பள்ளி பருவத்தில் அவரது கனவில் அடிக்கடி ரஜினிகாந்த் வருவாராம். அந்த கனவில் சைரன் வைத்த காரில் இருந்து இறங்கி வரும் ரஜினிகாந்த், தேசிய கொடியை ஏற்றி சல்யூட் அடிப்பாராம். இதே கனவு அடிக்கடி வருமாம்.
இதனிடையே ஒரு நாள் தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து சென்னையில் உள்ள தனது அண்ணனின் நண்பரை சந்திக்க சென்றிருக்கிறார் சுரேஷ். அந்த நண்பர் தீவிர ரஜினி ரசிகராம். “என்னை எப்படியாவது ரஜினி சாரிடம் கூப்பிட்டுக்கொண்டு போய் காட்டு. நான் அவரிடம் எனக்கு வரும் கனவு குறித்து கூற வேண்டும்” என கூறினாராம்.
அதற்கு அந்த நண்பர் “நீ நினைக்குற மாதிரி எல்லாம் ரஜினியை பாக்குறது அவ்வளவு ஈஸி கிடையாதுடா. ரொம்ப கஷ்டம். வேணும்ன்னா நேரா போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு முன் நின்று முயற்சி செய்வோம்” என யோசனை கூறினாராம்.
அதற்கு அடுத்த நாள் இருவரும் போயஸ் கார்டனுக்குச் சென்றனர். அங்கே ரஜினியோடு புகைப்படம் எடுப்பதற்காக பலரும் காத்திருந்தார்களாம். அப்போது சுரேஷ் ஒரு பேப்பரில் “நாங்கள் நெல்லையில் இருந்து வந்திருக்கிறோம். உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை கூற வேண்டும்” என எழுதி அங்குள்ள மேனேஜரிடம் கொடுத்துவிட்டாராம்.
அதன் பின் சில மணி நேரங்களிலேயே அனைவரையும் வீட்டின் முன்பகுதிக்குள் வரச்சொல்லி விட்டார்களாம். ரஜினியும் வீட்டை விட்டு வெளியே வர அங்கிருந்த அனைவரும் வரிசையாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்களாம். அப்போது இவரது முறை வரும்போது ரஜினிகாந்திடம், “உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என கூறினாராம்.
அதற்கு ரஜினிகாந்த், “முதலில் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின் பேசுவோம்” என கூறினாராம். அதற்கு அவர் “இல்லை சார், உங்க கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லனும் சார்” என கூறிக்கொண்டே இருந்தாராம். அதன் பின் அவரை தனியாக அழைத்த ரஜினியின் மேனேஜர், “யோவ் அறிவிருக்காயா? எதுக்கு அவர்கிட்டப் போய் தேவையில்லாததை எல்லாம் பேசுற” என திட்டினாராம்.
சுரேஷ் எழுதிய லெட்டரை மேனேஜர் ரஜினிகாந்த்திடம் கொடுத்துவிட்டார். “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நான் உங்ககிட்ட பேசுறேன்” என்று கூறினாராம் ரஜினிகாந்த். அதன் பின் சில மணி நேரங்கள் வீட்டு வாசலின் வெளியே இருவரும் காத்திருந்தார்களாம். அங்கே ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுக்க பலரும் இருந்ததால் ரஜினிகாந்த் நம்மை அழைக்க மாட்டார் என்ற அவநம்பிக்கையில் இருவரும் இருந்தார்களாம்.
ஆனால் சிறிது நேரத்தில் எதிர்பாராவிதமாக ரஜினிகாந்த் தனது மேனேஜரின் மூலம் அவர்களை உள்ளே அழைத்தாராம். ரஜினிகாந்த் வந்தவர்களை வீட்டுற்குள் இருக்கும் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று காஃபி கொடுத்தாராம். அதன் பின் தனக்கு வந்த கனவை குறித்து சுரேஷ் ரஜினியிடம் கூற, அதற்கு ரஜினிகாந்த் “சரி, நீங்க படிப்புல கவனம் செழுத்துங்க. நல்லா படிங்க. நீங்க ஷூட்டிங்க்லாம் பாத்திருக்கீங்களா?” என கேட்டாராம்.
அதற்கு அவர்கள் “இல்லை சார்” என கூற, தனது “பணக்காரன்” திரைப்படத்தின் ஷூட்டிங்கை பார்க்க அனுமதி தந்தாராம். அங்குள்ள ஒருவரை அழைத்து இந்த பசங்க வந்தா உள்ளே விடுங்க என கூறிவிட்டு “ஷூட்டிங் பாத்துட்டு ஊருக்கு போயிடனும்” என சுரேஷை பார்த்து ரஜினி கூறினாராம். அதன் பின் ஒரு நாள் வாஹினி ஸ்டூடியோவில் “பணக்காரன்” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்துக்கொண்டிருந்தபோது சிறப்பு அனுமதியுடன் இவர்கள் உள்ளே நுழைய, அங்கே ஒரு பெண் சிக்ரெட் பிடித்துக்கொண்டிருந்தாராம். யாரென்று கொஞ்சம் அருகில் சென்று பார்த்த பிறகுதான் தெரிந்திருக்கிறது அது ரஜினிகாந்த் என்று.
“நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்” என்ற பாடலில் ரஜினிகாந்த் பெண் வேடம் அணிந்து நடனம் ஆடுவார். அந்த காட்சி அப்போது அங்கே படமாக்கிக் கொண்டிருந்தார்களாம். இவர்களை பார்த்ததும், ரஜினி கைக்காட்டினாராம். அதன் பின் ஷூட்டிங்க்கை பார்த்துவிட்டு ரஜினியின் அருகே சென்று “நாங்கள் கிளம்புறோம் சார்” என கூறினார்களாம்.
அதற்கு ரஜினி “சரி போய்ட்டு வா. இனிமே இந்த விஷயமா நீ மெட்ராஸுக்கு வரக்கூடாது. இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லக்கூடாது. மனசுலயே வச்சிக்கோங்க” என கூறி அவர்களை அனுப்பி வைத்தாராம்.