ஷங்கரின் நடிப்பை பார்த்து பாராட்டிய ரஜினி… அதுவும் எப்போன்னு தெரியுமா? ஒரு ஃப்ளாஷ்பாக் சம்பவம்!
ஷங்கர் தற்போது உலகமே வியந்து பார்க்கும் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருகிறார். ஆனால் ஷங்கர் ஒரு காலகட்டத்தில் தில்லைராஜன் என்பவரின் நாடக சபாவில் நடிகராக இருந்தார். ஷங்கருக்கு சினிமாவில் நடிகராக ஆகவேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.
அப்போது ஒரு நாள் அவரது நாடகத்தை பார்க்க ரஜினிகாந்தும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்களாம். அங்கே நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த ஷங்கரின் நடிப்பை பார்த்த ரஜினிகாந்தும் எஸ்.ஏ.சியும் அவரை பாராட்டும் விதமாக கைத்தட்டினார்களாம்.
தன்னுடைய நடிப்பை பார்த்து கைதட்டிய ரஜினிகாந்தையும் எஸ்.ஏ.சியையும் பார்த்த ஷங்கர், மேற்கொண்டு சிறப்பாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின் அந்த நாடகம் முடிந்தபிறகு ஷங்கரை இருவரும் அழைத்து பாராட்டினார்கள்.
இதனை தொடர்ந்து நிச்சயம் ஒரு நாள் எஸ்.ஏ.சி அலுவலகத்தில் இருந்து நடிப்பிற்கான அழைப்பு வரும் என காத்திருந்தாராம் ஷங்கர். அவர் நினைத்தபடியே ஒரு நாள் அழைப்பு வந்தது. ஆனால் நடிப்பதற்கான அழைப்பு அல்ல அது. அதாவது “காமெடி சைடில் ஒரு உதவியாளர் தேவைப்படுகிறார், நீங்கள் சேர்ந்துகொள்கிறீர்களா?” என்று கேட்டார்களாம்.
சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட்டால் போதும் என்ற இருந்த ஷங்கர், எஸ்.ஏ.சியின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். அதன் பின் மெல்ல மெல்ல எஸ்.ஏ.சியின் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதனை தொடர்ந்துதான் “ஜென்டில் மேன்” திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அதன் பின் நடந்ததெல்லாம் வரலாறுதான்.