ஒரு வாரத்தில் ரிலீஸ்… திடீரென ஒரு பாட்டு கேட்ட இயக்குனர்… ஆனா அதுதான் படத்தோட சூப்பர்ஹிட்டாம்!...

by Akhilan |
ஒரு வாரத்தில் ரிலீஸ்… திடீரென ஒரு பாட்டு கேட்ட இயக்குனர்… ஆனா அதுதான் படத்தோட சூப்பர்ஹிட்டாம்!...
X

ரஜினியின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான ராஜசேகர் இயக்கிய படிக்காதவன் படம் அவரின் திரைப்பயணத்தில் முக்கியமான படம். இந்தப் படம் வசூலில் மிகப்பெரிய ஹிட்டடித்தது என்பதைத் தாண்டி ரஜினியும் சிவாஜியும் நடித்திருந்தது மற்றொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

1980களில் ஹிந்தியில் அமிதாப் செய்த பல படங்களை தமிழுக்குக் கொண்டுவந்து மிகப்பெரிய வெற்றியையும் பெற்றார் ரஜினி. அதில் 'Khud-Daar’ என்கிற பெயரில் 1982-ம் ஆண்டு வெளியான படத்தைத் தமிழில் உருவாக்க நினைத்தார். இதையடுத்து நண்பர் ராஜசேகரோடு இணைந்து தமிழுக்கு ஏற்றபடி திரைக்கதையில் சில, பல மாற்றங்களைச் செய்தார்.

இளையராஜா இசையமைக்க, ரஜினியின் அண்ணனாக சிவாஜி நடிக்க முடிவு செய்யப்பட்டது. அம்பிகா நாயகியாகவும் முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இளையராஜா இசையில் நான்கு பாடல்களின் ஷூட்டும் முடிந்து எடிட்டிங் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது, குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில், ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்குமே என இயக்குநர் ராஜசேகருக்குத் தோன்றியிருக்கிறது. ஒரு வாரத்தில் ரிலீஸ் என்ற நிலையில், குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு பாட்டு வேண்டும் என இயக்குநர் ராஜசேகர் சொல்லியிருக்கிறார்.

ஆரம்பத்தில் படக்குழுவினர் இது எப்படி சாத்தியம் என்று தயங்கியிருக்கிறார்கள். ஆனால், கண்டிப்பாக பாட்டு வேண்டும் என்பதில் ராஜசேகர் உறுதியாக இருந்தாராம். இதையடுத்து, அடுத்தநாள் காலையிலேயே இளையராஜா ட்யூன் போட்டு, மதியத்துக்குள் ரெக்கார்டிங்கை முடித்துக் கொடுக்கிறார்.

அந்த ஒருநாள் இரவிலேயே ரஜினி - அம்பிகாவை வைத்து ஷூட் செய்யப்பட்டு கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட பாடல்தான் 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்..’ பாடல். அந்தப் படத்தில் மிகப்பெரிய ஹிட் பாடலாக அது அமைந்தது.

Next Story