விஜயகாந்த் சினிமாவிற்குள் வந்ததற்கு காரணம் ரஜினியா?… இது புதுசா இருக்கே!
தமிழ் சினிமாவின் கேப்டனாக திகழ்ந்து வரும் விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள கிராமம். அவரது இயற்பெயர் நாராயண சுவாமி. மிகப்பெரிய பணக்கார வீட்டில் பிறந்த விஜயகாந்த், 10 ஆம் வகுப்புக்கு பிறகு தனது தந்தைக்கு சொந்தமாக இருந்த அரிசி ஆலையை கவனித்துக்கொண்டிருந்தார். சிறு வயதில் இருந்தே சினிமாவின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் விஜயகாந்த். இதன் காரணமாக மதுரையில் உள்ள சேனா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த மன்சூர் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தார்.
ஆசையை தூண்டிய ரஜினிகாந்த்
அந்த சமயத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா ஆகிய பலரும் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்ற விழாவிற்காக வந்திருந்தார்களாம். அப்போது மன்சூர் விஜயகாந்தை அழைத்து “மதுரை வந்திருக்கும் நடிகர்களை நீதான் பத்திரமாக ஹோட்டல் அறையில் இருந்து திரையரங்கிற்கு அழைத்து வரவேண்டும். அதே போல் விழா முடிந்தவுடன் திரையரங்கில் இருந்து ஹோட்டல் அறைக்கு அழைத்து செல்லவேண்டும்” என்ற பொறுப்பை கொடுத்திருக்கிறார்.
அந்த பொறுப்பை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார் விஜயகாந்த். அப்போது ரஜினிகாந்த், விஜயகாந்திடம், “நீங்க என்னைய மாதிரியே இருக்குறீங்களே. நீங்க பேசாம சினிமாவுல நடிக்கலாமே” என கூறினாராம். அதன் பிறகுதான் விஜயகாந்துக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையே வந்ததாம். அதனை தொடர்ந்துதான் சென்னைக்கு வாய்ப்பு தேடி கிளம்பியிருக்கிறார் விஜயகாந்த். இவ்வாறு விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் காரணமாக இருந்திருக்கிறார்.