தமிழ் திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு விநியோகஸ்தராக உயர்ந்தவர் ராஜ்கிரண். ஒருகட்டத்தில் தயாரிப்பாளராக மாறி ராமராஜனை வைத்து ராசாவே உன்ன நம்பி, என்ன பெத்த ராசா போன்ற படங்களை தயாரித்தார்
. அதன்பின் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராமராஜனை வைத்து என் ராசாவின் மனசிலே என்கிற படத்தை எடுக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த படத்தில் ராமராஜனல் நடிக்க முடியவில்லை. எனவே ராஜ்கிரணே ஹீரோவாக நடித்தார். இப்படித்தான் ராஜ்கிரணின் நடிகர் பிரவேசம் துவங்கியது.
அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்தார் ராஜ்கிரண். அவரின் படங்கள் ராமராஜன் படங்களை போலவே பட்டி தொட்டியெங்கும் நல்ல வசூலை பெற்றது. நடிப்பதில் ஒரு கொள்கை கொண்டவர் ராஜ்கிரண். வில்லனாகவோ மோசமான விஷயங்களை செய்யும் ஒரு நபராகவோ சினிமாவில் நடிக்க மாட்டார். அவரின் கதாபாத்திரம் மூலம் மக்களுக்கு ஏதோ ஒரு நல்லதை சொல்லவேண்டும் என நினைப்பார். சினிமாவில் ஹீரோ வாய்ப்பு குறைந்ததும் குணச்சித்திர நடிகராக மாறினார்.
நந்தா, சண்டக்கோழி போன்ற படங்கள் மூலம் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ராஜ்கிரண் இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்திலும் அவரின் அப்பாவாக நடித்திருந்தார்.
இவர் வினியோகஸ்தராக இருந்த போதுசிலர் அவரிடம் நீங்களே ஹீரோவாக நடிங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ‘உயரம் குறைவாக, கட்டையான உடல் அமைப்பு கொண்ட நான் எப்படி ஹீரோவாக நடிக்க முடியும்? என்கிற தாழ்வு மனப்பான்மையில் இருந்திருக்கிறார் ராஜ்கிரண்.
அப்போது அவருடன் இருந்த சிலர் ‘நீங்கள் சினிமாவில் நடியுங்கள்.. ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறுவீர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதை அப்போது ராஜ்கிரண் நம்பவில்லை. ஆனால் அவர் நடிகராகி அவருக்கு பெரிய மார்க்கெட் உருவான பின் ரஜினியை விட அதிக சம்பளம் கொடுத்து படத்தில் அவரை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும் முன்வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
