வடிவேலு வந்து எங்கிட்ட சினிமா சான்ஸ் கேட்கல...சொல்கிறார் ராஜ்கிரண்...அப்புறம் எப்படி படத்துல அறிமுகம்?
நடிகரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரண் ஒரு காலத்தில் வெற்றிப்படங்களை வாரி வாரிக் கொடுத்தார். தொடர்ந்து 3 வெள்ளி விழாப்படங்களைக் கொடுத்து தமிழ்த்திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
என் ராசாவின் மனசிலே, எல்லாமே என் ராசாதான், அரண்மனைக்கிளி என்ற அந்தப்படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஒருவித புது அனுபவத்தைத் தந்தன. தனது படங்களில் கிராமிய மணம் கமழ யதார்த்தமான கதாபாத்திரங்களை வெகு நேர்த்தியாகக் காட்டியிருப்பார் ராஜ்கிரண்.
அவர் அறிமுகப்படுத்திய நடிகர் தான் வைகைப்புயல் வடிவேலு. அந்த இனிய தருணத்தை ராஜ்கிரணே எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்.
வடிவேலு என்கிட்ட சினிமா சான்ஸ் கேட்டு வரல. நான் தயாரிப்பாளரா இருக்கும் போது விளம்பரத்துல சில யுக்திகளை எல்லாம் பயன்படுத்தினேன். அதன் மூலமா எனக்கு ரசிகரானவங்க நிறைய பேரு. தயாரிப்பாளருக்கு ரசிகனானாங்க. அதுல மதுரையில இளங்கோன்னு ஒரு பையன்.
அவன் வெறித்தனமான ரசிகன். அவன் கல்யாணத்துக்கு நான் வந்து தான் தாலிய எடுத்துக் கொடுக்கணும்னுட்டான். அப்படி நிறைய பேரு சொல்லுவாங்க.
அவன் குல வழக்கப்படி கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டா 11 நாளைக்கு வெளிய எங்கேயும் ஊரை விட்டுப் போகக்கூடாதாம். இவன் கல்யாணத்துக்கு இன்னும் 4 நாள் இருக்கு. ஊரை விட்டு கிளம்பி வந்துட்டான் என்னைப் பார்க்க. இவன் புறப்பட்டு போயிட்டான்னா குலவழக்கம் கெட்டுப்போயிடுமே. அதனால அவங்க சொந்த பந்தம் எல்லாமே பின்னால வந்துடுச்சு.
ஐயா இந்தக் குல வழக்கத்தை எல்லாம் மீறி நீங்க வந்து தான் தாலியை எடுத்துக் கொடுக்கணும்கறான்னு சொல்ல எனக்கு மனசு ஒரு மாதிரியா ஆயிடுச்சு. நான் நிச்சயம் வர்றேன்னுட்டேன். அப்போ அந்தக் கல்யாணத்துக்கு ட்ரெய்ன்ல போனேன். அவன் சொன்னான்.
அண்ணே...கல்யாணம் 10 மணிக்குலாம் முடிஞ்சிடும்ணேன். அப்புறம் நீங்க ரூம்ல தனியா இருப்பீங்க. உங்களுக்குப் போரடிக்குமே. என் பிரண்ட் ஒருத்தன் இருக்கான். அவன் நல்லா காமெடியா பேசிக்கிட்டு இருப்பான். அவனை அனுப்புறேன். ட்ரெயின் வர்ற வரைக்கும் உங்க கூட இருப்பான்னு சொன்னான். அப்படி வந்தவன் தான் வடிவேலு. அவன் மதுரைல எங்கெங்கலாம் இருந்து என்னென்ன செஞ்சானோ அதெல்லாம் அவன் மனசுக்கு வந்தபடி பேசிக்கிட்டு இருக்கான்.
நான் சிரிச்சிக்கிட்டே இருக்கேன். அப்புறம் டைமாயிடுச்சி. ட்ரெய்ன்ல ஏத்தி விட்டுட்டுப் போயிட்டான். இதுல என்ன விசேஷம்னா அவனுக்கு சினிமால நடிக்கிற எண்ணம் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அவன் சினிமா வாய்ப்பை என்கிட்ட கேட்கல. நானும் அவனைப் பார்த்துட்டு உனக்கு சினிமால வாய்ப்புத் தாரேன்னு சொல்லல. ஏதோ டைம் பாஸ்க்கு வந்தான். போனான்.
இதுக்கு அப்புறம் 2 வருஷம் கழிச்சித் தான் ராசாவின் மனசிலே ஆரம்பிக்கிறோம். கவுண்டமணி அண்ணனையும், செந்தில் சாரையும் காமெடிக்காக பிக்ஸ் பண்ணிருக்கேன். இப்போ நாளைக்கு அவங்க கலந்துக்குற சூட்டிங் இருக்கு. இன்னைக்கு நைட் 9 மணிக்கு என்னோட புரொடக்ஷன் மேனேஜர் சொல்றான்.
சார் கவுண்டமணி சார் பொள்ளாச்சில இருக்காரு. இன்னைக்கு நைட் அவரு வந்துடணும். ஆனா இப்போ பேசினா எனக்கு இன்னும் சம்பளம் பேசல. எனக்கு அட்வான்ஸ் வேணும்கறாரு. இவ்வளவு சம்பளம் கேட்குறாரு. இவ்வளவு அட்வான்ஸ் கேட்குறாருன்னு சொன்னான்.
ஆனா ஆரம்பத்துல அப்படிலாம் இல்ல. வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்னு தான் சொன்னோம். இப்ப வர மாட்டேங்குறாருன்னு சொன்னான். எனக்கு அப்செட்டாயிடுச்சு, உடனே இளங்கோவோட கடிதத்தைத் தேடி எடுத்து அவனுக்கு போன் போட்டு வடிவேலை திண்டுக்கல்லுக்கு வரச் சொன்னோம். காலைல 7 மணிக்கே வடிவேலு வந்துட்டான்.
காலைல 9 மணிக்கு சூட்டிங்குக்கு தயாரா நான் வர்றேன். கவுண்டமணி அண்ணே வணக்கம் சார்னு சொல்ல எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அப்புறம் அவருக்கிட்ட நான் விவரத்தை சொல்ல எவன் சொன்னான்னு கோபத்துல கேட்டார். உடனே வடிவேலயும் திருப்பி அனுப்ப முடியாதுன்னு அவனுக்கு ஒரு சீனைக் கொடுத்தோம்.
கிளி ஜோசியக்காரன் இவனைப் பார்த்து உனக்கு நாக்குல சனி. நீ சும்மா இருந்தாலும் உன் நாக்கு சும்மா இருக்காதுன்னு சொல்ற ஒரு காமெடி சீன். அப்போ வடிவேலு அப்படியான்ணேன்னு காக்கா மாதிரி தலையை திருப்பி திருப்பிப் பார்த்தான்.
அது எனக்கு இம்ப்ரஸ் ஆச்சு. அப்போ கவுண்டமணி வெளிய வர்றாரு..அண்ணே சவுக்கியமாண்ணேன்னு வடிவேலு கேட்க...ஏன்டா நான் என்ன நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில இருந்து எந்திரிச்சாடா வாரேன்..சவுக்கிமான்னு கேட்குற...இனிமே கேப்பியாடா....ன்னு சொல்லி அவனை மிதி மிதின்னு மிதிப்பாரு...
அப்போ அவன் அண்ணே ரொம்ப வலிக்குதுன்ணேன்...படாத எடத்துல பட்ற போதுன்னு ஒரு சொந்த டயலாக்கையும் சேர்த்து சொல்வான்..இவனுக்கு இப்படி ஒரு கிரியேட்டரான்னு எனக்கு ஆச்சரியமாச்சு. நான் விழுந்து விழுந்து சிரிச்சேன். படத்துல 2 சீன் நடிச்சு முடிச்சதும் ரொம்ப சந்தோஷம்ணேன்.
எனக்கு சினிமாவுல நடிக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு. நான் கிளம்புறேன்னு சொன்னான். ஊருக்குப் போயி என்னடா செய்யப்போறன்னு கேட்டேன். அண்ணே போட்டோ பிரேமிங் கடையில கொஞ்ச சம்பளத்துக்கு வேலை செய்றேன்னு சொன்னான். இனிமே இங்கேயே இருடா. என் ஆபீஸ்ல தங்கிக்க...ஊருக்கு தேவையானதை அனுப்புன்னு சொல்லி தங்க வச்சேன்.