ரஜினிகாந்த் நடித்து தோல்வியைத் தழுவி பிளாப் ஆன படங்கள்
ஆனைக்கும் அடி சறுக்கும் என்று சொல்வார்கள். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் ஒரு சில படங்கள் அவர்களுக்கும் தோல்வியைத் தழுவி விடுகின்றன. இது எம்ஜிஆர் காலம் முதல் நடந்து வரும் ஒரு விஷயம் தான். புதிதல்ல. அதே நேரம் படம் எடுக்கும் போது தோல்வியை அடையும் என்ற எண்ணத்தில் யாரும் தயாரிப்பது இல்லை.
படத்தின் ஏதேனும் ஒரு காட்சியோ கதை அம்சமோ திரைக்கதையோ படத்தைப் பார்க்கும் ரசிகர்களைக் கவருவதில்லை. அதனால் அந்தப்படம் தோல்வி அடைந்து விடுகிறது. அந்த வகையில் எல்லோராலும் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரஜினிகாந்த்துக்கு என்னென்ன படங்கள் தோல்வியைத் தழுவின என்று பார்க்கலாம்.
பாண்டியன்
1992ல் வெளியான இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர். படத்தில் ரஜினி, குஷ்பூ, ஜனகராஜ், பிரபாகர், வினுசக்கரவர்த்தி, சரண்ராஜ், ராதாரவி, டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்தனர். பாண்டியனின் ராஜ்யத்தில் என்ற பாடல் சூப்பர்ஹிட்டானது. ஆனால் இந்தப்படம் என்ன காரணம் என்று தெரியவில்லை. தோல்வியைத் தழுவியது.
மாவீரன்
1996ல் வெளியான இப்படத்தை ராஜசேகர் இயக்கினார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். ரஜினிகாந்த், அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா, நாகேஷ், தாராசிங், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் ரஜினிகாந்த் நாய், குதிரையுடன் பேசும் நீளமான வசனங்கள் ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்து கதையில் தொய்வு ஏற்படச் செய்தது. படம் தோல்வியைத் தழுவ இதுவும் ஒரு காரணமாக அமைந்து விட்டது. மற்றபடி இது இந்திப்படத்தின் ரீமேக் என்பதால் அந்த அளவு ரசிகர்களைத் திருப்திபடுத்தவில்லை.
பாபா
2002ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் பாபா. இந்தப்படத்தில் ரஜினிகாந்த் பாபாஜியின் கதையை மையமாகக் கொண்டு ஒரு ஆன்மிக படமாக எடுத்து இருப்பார். படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம். மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, விஜயகுமார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, கிட்டி, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினிகாந்த்தின் வழக்கமான ஸ்டைல்கள் இருந்தபோதும் படத்தின் கதைப்போக்கும், ஆன்மிக அம்சங்களும் ரசிக்கும்படியாக இருந்தபோதும் படம் ஏனோ வெற்றி பெறவில்லை.
காலடியில் இருந்து நெருப்புப்பொறி பறப்பது, ஓவரான ஸ்டைல்கள் மற்றும் திரைக்கதை போன்றவை மக்களை அதிகம் கவரவில்லை என்பது தான் உண்மை. மற்றபடி ஆன்மிக கண்ணோட்டத்தில் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் விருந்துதான். வணிகரீதியில் தோல்வியைத் தழுவிய படம் இது.
குசேலன்
2008ல் வெளியான இந்தப்படத்தை பி.வாசு இயக்கினார். ரஜினிகாந்த், மீனா, பிரபு, பிரகாஷ்குமார், பசுபதி, வடிவேல், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினிகாந்த் தனது உண்மையான கேரக்டரிலேயே அதாவது நடிகராகவே நடித்து இருப்பார்.
இந்தப்படத்தில் கதை என்று சொல்லும்படி எதுவும் கிடையாது. படப்பிடிப்பின்போது அவரைப் பார்ப்பதற்கு ரசிகர்களும் மக்களும் போட்டி போடுவர். இந்தப்படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்த படம் இது.
லிங்கா
2014ல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்தப்படத்தில் ரஜினிகாந்துடன் அனுஷ்காஷெட்டி, சோனாக்ஷி சின்கா, சந்தானம், ராதாரவி, நிழல்கள் ரவி, விஜயகுமார், மனோபாலா, இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த இந்தப்படத்தில் பாடல்களும் ரசிக்கும்படியாக அமையவில்லை. எதிர்பார்த்து வெற்றி அடையாமல் தோல்வியைத் தழுவிய படங்களில் இதுவும் ஒன்று.
கோச்சடையான்
2014ல் ரஜினிகாந்த்தை வைத்து கே.எஸ்.ரவிகுமாரின் மேற்பார்வையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோனோ, ஷோபனா, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை. இது முழுக்க அனிமேஷன் படம் என்பதால் பெரும்பாலான ரசிகர்களை படம் கவரவில்லை. ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்ற அடைந்தனர் என்றே சொல்லலாம்.
தர்பார்
நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்த இந்தப்படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் தான் வந்தது. ஆனால் திரைக்கதை எதிர்பார்த்த அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. இதனால் படம் தோல்வி அடைந்தது.
படத்தில் ரஜினியுடன், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் படம் அதிரடியாக இருக்கும் என்று நினைத்தால் படம் பிளாப் ஆகி விட்டது என்றே சொல்லலாம்.
காலா
பா.ரஞ்சித் இயக்கிய இந்தப்படத்தை தனுஷ் தயாரித்தார். மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியான தாராவியில் எடுக்கப்பட்ட படம். கதையின் போக்கு அந்தப்பகுதியைச் சுற்றியது. ஹியூமா குரோஷி, சமுத்திரகனியின் நடிப்பில் படம் பலத்த எதிர்பார்ப்பில் இருந்தது.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார். 2018ல் வெளியான இந்தப்படமும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை.
மேற்கண்ட படங்கள் தான் தோல்வியே தவிர விநியோகஸ்தர்களுக்கு எந்தவிதத்திலும் நஷ்டம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.