ரஜினிகாந்த் நெகட்டிவ் ரோலில் கலக்கிய படங்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஹீரோ ரோலை விட வில்லன் ரோல் ரொம்பவே சூப்பரா வரும். இந்தப்படங்களைப் பார்க்கும் போது தான் ரஜினிகாந்தின் அசால்டான நடிப்பை நாம் பார்க்கலாம். இதுபோன்ற நடிப்பு எலலோருக்கும் வராது. குறிப்பிடத்தக்க சில நடிகர்களுக்குத் தான் வரும்.
ரஜினிகாந்த் பல படங்களில் நெகட்டிவ் ரோல்கள் செய்துள்ளார். அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் கமல், ரஜினி என இருவரும் நடித்து இருப்பர். இதில் ரஜினிகாந்த் தான் வில்லன். அதே போல் எந்திரன் படத்தில் கூட வில்லன் ரோபோவாக வரும் ரஜினிகாந்த் தான். பாட்ஷா படத்திலும் மும்பை டானாக வரும் ரஜினிகாந்த் செம மாஸான நெகடிவ் ரோல் கேரக்டர் தான்.
ரஜினியின் வில்லன் படங்கள் என்று பார்க்கப்போனால் பெரும்பாலும் அவர் கமலுக்கு வில்லனாகவே நடித்து இருப்பார். அவை அனைத்தும் பெயர் வாங்கிய படங்கள். அப்படிப்பட்ட சில படங்களைப் பார்க்கலாம்.
மூன்று முடிச்சு
1976ல் வெளியான படம். கே.பாலசந்தர் இயக்கத்தில் வந்த இந்த படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி, விஸ்வநாதன், ஒய்.விஜயா, ஒருவிரல் கிருஷ்ணாராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்;. ஆடி வெள்ளி, நானொரு கதாநாயகி, வசந்தகால நதிகளிலே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
காயத்ரி
1977ல் பட்டாபிராமன் இயக்கிய படம் காயத்ரி. ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய காயத்ரி என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு வில்லன் வேடம்.
ஆடுபுலி ஆட்டம்
1977ல் வெளியான இந்தப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். கமல், ஸ்ரீபிரியா, ரஜினிகாந்த், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் தான் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். சிறப்பான நடிப்பை தனக்கே உரிய ஸ்டைலுடன் வெளிப்படுத்தி அசத்தியிருப்பார் ரஜினிகாந்த்.
16 வயதினிலே
1977ல் வெளியான இந்தப்படத்தில் கமல், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் என முப்பெரும் நாயகர்கள் நடித்துள்ளனர். மூவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். இப்படத்தை பாரதிராஜா இயக்கியுள்ளார்.
படம் செம ஹிட். வெள்ளி விழா கண்டது. இந்தப்படத்தில் கமல் படம் முழுவதும் கோவணம் கட்டி நடித்து இருப்பார். ரஜினிகாந்த் பரட்டை என்ற கேரக்டரில் மாஸ் வில்லனாக வலம் வருவார். இது எப்படி இருக்கு? ஹவ் இஸ் இட்? என்ற பஞ்ச் டயலாக்குகளை ரஜினிகாந்த் இந்தப்படத்தில் தான் பேசினார்.
நெற்றிக்கண்
1981ல் வெளியான இந்தப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரஜினிகாந்த், சரிதா, லட்சுமி, கவுண்டமணி, தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.
மாப்பிள்ளைக்கு, ராஜா ராணி, ராமனின் மோகனம், தீராத ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ராமனின் மோகனம் பாடல் செம ஹிட். கண்ணதாசன் எழுதிய இப்பாடலை கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி ஆகியோர் பாடினர். ரஜினிகாந்த் நெகட்டிவ் ரோலில் பட்டையைக் கிளப்பிய படம் இதுதான்.