ரஜினிக்கு புகழை சேர்த்த அந்த வசனத்துக்கு சொந்தக்காரர் இவர்தானாம்!.. அட நம்பவே முடியலயே!..
பாட்ஷா படத்தில் நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரின்னு ரஜினி பேசும் பஞ்ச் டயலாக் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. சிறுவர்கள் கூட விளையாடும்போது ஸ்டைலாக அந்த வசனத்தைப் பேசி அசத்துவர். அதன்பிறகு மேடைகளில் ரஜினி வேஷம் போட்டு பேசும் பிரதான வசனம் இதுவாகத் தான் இருக்கும்.
இந்தப் படத்தில் ரஜினி காந்த் இந்த வசனத்தை பேசும் போது ரொம்பவே ஸ்டைலாக இருக்கும். சாதாரண ஆட்டோக்காரனாக காக்கிச்சட்டை அணிந்து வரும் ரஜினி திடீரென ஆக்ஷன் ஹீரோவாக மாறி பட்டையைக் கிளப்ப ஆயத்தமாகும் போது இந்த வசனத்தைப் பேசுவார். சட்டையை இரு கைகளாலும் விலக்கியபடி இடது கையைத் தூக்கி ஆள்காட்டி விரலை உயர்த்தி அவர் பேசும் வசனம் செம மாஸ் தான். இப்போது பார்த்தாலும் எந்த நடிகர் நடித்தாலும் இப்படி ஒரு ஸ்டைல் வராது என்றே சொல்லலாம்.
பாட்ஷா... மாணிக் பாட்ஷா என்று அவரது பெயரைச் சொல்லும் போதும், அவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக ரகுவரன் ஆண்டனி... மார்க் ஆண்டனி என்று சொல்லும் போதும் தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளந்தது. அதே போல, என் வழி, தனி வழி... என்று சொல்லும் ரஜினி வலது கையால் கோடிட்டுக் காட்டுவார். அவருக்கு நிகர் அவர் தான். அதனால் தான் அவரை சூப்பர் ஸ்டார் என்றும் ஸ்டைல் மன்னன் என்றும் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். அவர் நடக்கும் நடையும், உடையும், கம்பீரமாக வேகமாகப் பேசும் வசனங்களும் ரஜினிக்கே உரிய அடையாளங்கள்.
அதெல்லாம் சரி. பாட்ஷா படத்தில் நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்ற பஞ்ச் டயலாக்கை எழுதியது யார் தெரியுமா? அவர் தான் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன். ரஜினியே அவர் மறைந்த போது இரங்கல் அஞ்சலியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாட்ஷா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமே பாலகுமாரன் தான் என்றார். அப்போது அவர் கூறுகையில், பாலகுமாரன் என் நெருங்கிய நண்பர். இந்தப் படத்துக்கு வசனம் எழுதணும்னு சொன்ன போது எனக்கு பணம், புகழை விட இலக்கியம் தான் முக்கியம்... ஆன்மிகம் தான் முக்கியம்னு சொன்னார் என்றார்.