Cinema News
ராமராஜனுடன் மீண்டும் கைக்கோர்க்கும் இசைஞானி… பல வருட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கும் வெற்றி காம்போ!!
1980களில் தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் ராமராஜன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோரின் திரைப்படங்கள் போட்டிப் போட்டு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் தனி டிராக் போட்டு மக்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தவர் ராமராஜன்.
“எங்க ஊரு பாட்டுக்காரன்”, “கிராமத்து மின்னல்”, “எங்க ஊரு காவல்காரன்” என கிராமத்தை மையமாக வைத்து பல திரைப்படங்களில் நடித்த ராமராஜனுக்கு “கரகாட்டக்காரன்” திரைப்படம் அவரது சினிமா கேரியரில் மைல்கல்லாக அமைந்தது. தமிழகத்தில் பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது அத்திரைப்படம்.
ராமராஜன் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றித்திரைப்படங்களாகவே அமைந்தன. அத்திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது இளையராஜாவின் இசை. மைக் மோகன்-இளையராஜா காம்போவை போலவே ராமராஜன்-இளையராஜா காம்போவும் வெற்றி காம்போவாக அமைந்தது.
இந்த நிலையில் ராமராஜன் வெகு காலத்திற்குப் பிறகு “சாமானியன்” என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக கம்பேக் கொடுக்க உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து “சாமானியன்” திரைப்படம் குறித்தான ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பத்திரிக்கையாளர் சி.சக்திவேல் பகிர்ந்துள்ளார். ராமராஜனுக்கு “கரகாட்டக்காரன்”, “எங்க ஊரு பாட்டுக்காரன்” என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் கங்கை அமரன் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கங்கை அமரன், ராமராஜனுக்கு தொடர்புக்கொண்டு “பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்கப்போகிறீர்கள். ஆதலால் சாமானியன் திரைப்படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்யலாமே” என கூறினாராம்.
உடனே ராமராஜன் இளையராஜாவை தொடர்புக்கொண்டு ஒப்புதல் கேட்டிருக்கிறார். இளையராஜாவும் “சாமானியன்” திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டாராம். இதன் மூலம் ராமராஜன்-இளையராஜா என்ற வெற்றி காம்போ மீண்டும் களமிறங்க உள்ளதாக தெரிய வருகிறது. எனினும் “சாமானியன்” திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி என்பவர் இசையமைக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.