Cinema News
“நான் ஹீரோவாதான் நடிப்பேன்னு சொல்லல? ஆனா அதுதான் நல்லது”.. மனம் திறந்த ராமராஜன்
ரஜினி-கமல் திரைப்படங்கள் போட்டி போட்டு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் கிராமத்து கதாநாயகனாக மக்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தவர் ராமராஜன். “எங்க ஊரு பாட்டுக்காரன்”, “எங்க ஊரு காவல்காரன்”, “வில்லுப்பாட்டுக்காரன்”, “கரகாட்டக்காரன்” என இவர் நடித்து மாஸ் ஹிட் ஆகிய படங்கள் ஏராளம்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த ராமராஜன் அரசியலில் ஈடுபட்ட பின்பு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். ராமராஜன் கடந்த 2012 ஆம் ஆண்டு “மேதை” என்ற திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படத்திற்கு பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
ஆனால் அதன் பின்பும் அவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்ததாகவும், ஆனால் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என கூறியதாகவும் சில செய்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் ராமராஜன் நடித்த “சாமானியன்” திரைப்படத்தின் டீசர் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் டீசரில் ராமராஜன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி மிரட்டுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. இது த்ரில்லர் வகையரா திரைப்படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் பல வருடங்கள் கழித்து நடிக்க வரும் ராமராஜன், தன்னுடைய பாணியையே மாற்றி புது மாதிரியான கதையில் நடித்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாகவும் இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற “சாமானியன்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய ராமராஜன் “எல்லோரும் சொன்னார்கள், நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று. ஆனால் நான் அப்படி சொல்லிருந்தேனா என எனக்கு தெரியவில்லை. ஆனால் ராமராஜன் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பாராம் என்று செய்தி பரவியது எனக்கு மிகவும் நல்லதாக போய்விட்டது. தற்போது இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துவிட்டேன்” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “நான் இத்தனை காலத்தில் ஹீரோவாக நடிக்க பல கதைகளை கேட்டு தான் வந்தேன். ஆனால் ஒன்று கூட சரியாக மாட்டவில்லை. இந்த படம் தான் நன்றாக அமைந்தது.
100 கோடி கொடுத்தாலும் தாறுமாறாக நடிப்பதற்கு நான் ஒன்றும் தரங்கெட்ட வர்க்கத்தில் பிறக்கவில்லை. புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் வழியில் வந்தவன் நான்” எனவும் ராமராஜன் உணர்ச்சி மிகுதியில் கூறியது குறிப்பிடத்தக்கது.