ஸ்ரீதேவிக்கு நடிப்பு சொல்லி கொடுத்ததே நான்தான்...இது என்னடா புதுக்கதை....
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, “16 வயதினிலே” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறியப்பட்டார். அதற்கு முன் “மூன்று முடிச்சு”, “கவிக்குயில்” போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் “16 வயதினிலே” மயிலு கதாப்பாத்திரம் அவரை பரவலாக அறிய வைத்தது.
அதனை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. அதன் பின் 1996 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 2 மகள்கள் பிறந்தனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார். தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவிக்கு நடிப்புச் சொல்லித்தந்தது ரமேஷ் கண்ணா தான் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? இதை அவரால் கூட நம்பமுடியவில்லை என சொல்கிறார்.
நடிகர், இயக்குனர், கதாசிரியர் என பல முகங்கள் கொண்ட ரமேஷ் கண்ணா சிறு வயதிலேயே பல நாடகங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அதன் பின் பலருக்கும் நடிப்பை பயிற்றுவிற்றிருக்கிறார். இந்த நிலையில் ரமேஷ் கண்ணாவின் வீட்டின் அருகில் தனது குடும்பத்துடன் குடியிருந்திருக்கிறார் ஸ்ரீதேவி. அப்போது ஸ்ரீதேவி சிறுமிதானாம்.
ஒரு நாள் ஸ்ரீதேவியின் தந்தை ரமேஷ் கண்ணாவின் தந்தையிடம் “உனது பையன் நாடகம் நடத்துகிறானாமே. என் பொண்ணுக்கு நடிக்க சொல்லிக்கொடுக்க சொல்லு” என கூறியிருக்கிறார்.
இது குறித்து ரமேஷ் கண்ணா சமீபத்தில் பேட்டி ஒன்றில் “நான் ஸ்ரீதேவிக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தேன் என சொன்னால் யாராவது இந்த காலத்தில் நம்புவார்களா? அந்த நேரத்தில் ஸ்ரீதேவி மிகவும் சின்னப்பெண். நான் ஸ்ரீதேவிக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்ததை நினைத்துப்பார்த்தால் உலக அதிசயமாக இருக்கிறது” என கொஞ்சம் கேலியோடு கூறியுள்ளார் ரமேஷ் கண்ணா. ரமேஷ் கண்ணா ஸ்ரீதேவிக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்ததாக கூறியதை கேட்கும்போது நமக்கும் கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.