வடிவேலு உள்ளே வந்ததால் ரமேஷ் கண்ணாவை விரட்டியடித்த இயக்குனர்… சொந்த கதையில் ஒரு சோக கதை…
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் ரமேஷ் கண்ணா. இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாது கதாசிரியராகவும் வசனக்கர்த்தாவாகவும் பணியாற்றியவர். ரமேஷ் கண்ணா தனது 5 ஆவது வயதில் இருந்தே நாடகத்துறையில் நடித்து வந்தவர். கிட்டத்தட்ட 1000 நாடகங்களுக்கு மேல் நடித்தவர் இவர்.
ரமேஷ் கண்ணா தொடக்கத்தில் பாண்டியராஜன், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். மேலும் அஜித்குமாரை வைத்து “தொடரும்” என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் “ஆதவன்” திரைப்படத்தின்போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு சூர்யா, நயன்தாரா, சரோஜா தேவி, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆதவன்”. இத்திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். ரமேஷ் கண்ணா இத்திரைப்படத்தின் கதையை எழுதியிருந்தார். இத்திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் வடிவேலுவுக்கு பதில் அந்த கதாப்பாத்திரத்தில் ரமேஷ் கண்ணா நடிப்பதாக இருந்ததாம். அந்த சமயத்தில் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டு வந்ததால் உதயநிதி ஸ்டாலின் வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்தாராம். தயாரிப்பாளரே முடிவெடுத்ததால் கே.எஸ்.ரவிக்குமாரால் எதுவும் பேச முடியவில்லையாம்.
இதனை கேள்விபட்டவுடன் ரமேஷ் கண்ணா, கே.எஸ்.ரவிக்குமாரிடம், “என்ன சார் என் கதாப்பாத்திரத்துல வடிவேலு நடிக்கிறார். என்னுடைய கதையில நான் நடிக்க கூடாதா?” என கேட்டிருக்கிறார். அதற்கு கே.எஸ்.ரவிக்குமார், “அதான் உன் பேர் கதைன்னு போடுறோம்ல. அப்பரம் என்ன போடா” என்று திட்டினாராம். அதன் பிறகுதான் “இளையமான்” என்ற கதாப்பாத்திரத்தை தனக்காக உருவாக்கி அதில் நடித்தாராம் ரமேஷ் கண்ணா.
இதையும் படிங்க: டி.ராஜேந்தரிடம் அடுக்குமொழியில் சண்டைபோட்ட கலைப்புலி தாணு… இப்படியா இறங்கி அடிக்கிறது?