அப்பாவுக்கு விஜயகாந்த் செய்ததை மறக்கவே மாட்டோம்!. சிவாஜியின் மூத்த மகன் நெகிழ்ச்சி..
திரையுலகில் கஷ்டப்பட்டு நுழைந்து பெரிய நடிகராக மாறியவர் விஜயகாந்த். சினிமா பின்னணி இல்லாமால் போராடி பல தடைகளை தாண்டித்தான் விஜயகாந்த் சினிமாவில் ஹீரோவாக மாறினார். எம்.ஜி.ஆரை போலவே ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.
அதேபோல் நிஜவாழ்வில் எல்லோரும் உதவி செய்யும் நபராக கடைசிவரை விஜயகாந்த் இருந்தார். நான் சாப்பிடும் உணவைத்தான் படப்பிடிப்பு தளத்தில் லைட்மேன் வரை எல்லோரும் சாப்பிடவேண்டும் என திரையுலகில் சொன்ன முதல் நடிகர் விஜயகாந்த் மட்டுமே. அதை அவர் நடிக்கும் படங்களில் செயல்படுத்தியும் காட்டினார். பல புதிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை உருவாக்கினார். யார் என்ன உதவி கேட்டாலும் உடனே செய்து கொடுப்பார். அவரின் அலுவகத்திற்கு சென்றால் எப்போதும் சாப்பாடு கிடைக்கும் என்பது பலரின் நம்பிக்கையாக இருந்தது.
நலிவடைந்த, வாய்ப்புகள் இல்லாத திரையுலகை சேர்ந்தவர்கள் பலருக்கும் தினமும் உணவளித்தார். அதேபோல், கடனில் இருந்த நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு ரூ.2 கோடி இருப்பும் வைத்தவர் விஜயகாந்த். திரையுலகில் ஒரு பிரச்சனை எனில் முதல் ஆளாக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களம் இறங்குவர் விஜயகாந்த் மட்டுமே.
இந்நிலையில், நடிகர் திலகத்தின் மூத்தமகன் ராம்குமார் ஊடகம் ஒன்றில் பேசும்போது ‘என் அப்பா மறைந்த அன்று எங்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் அவரின் உடலை ஊர்வலமாக கொண்டு சென்றது முதல் அடக்கம் செய்தது வரை எல்லாவற்றையும் விஜயகாந்தே பார்த்துகொண்டார். அதை எப்போதும் எங்கள் குடும்பம் மறக்காது. அதற்காக விஜயகாந்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.