சத்யராஜ் படத்திற்கு சம்பளமே வாங்காமல் 12 மணி நேரம் டப்பிங் பேசிய பாகுபலி நடிகை… என்னப்பா சொல்றீங்க!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ரம்யா கிருஷ்ணன், தமிழில் “வெள்ளை மனசு” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடக்கத்தில் பல திரைப்படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
எனினும் தெலுங்கில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தார் ரம்யா கிருஷ்ணன். இதனிடையே தமிழில் “படையப்பா” திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் அவரை தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆக்கியது.
இதனை தொடர்ந்து “பாகுபலி” திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த சிவகாமி கதாப்பாத்திரம் அவரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டுசென்றது. இதனிடையே “தங்க வேட்டை”, “ஜோடி நம்பர் ஒன்”, போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் ஜட்ஜாகவும் வலம் வந்தார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் ரம்யா கிருஷ்ணன் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜல்லிக்கட்டு”. இத்திரைப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். சித்ரா லட்சுமணன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இதில் ரம்யா கிருஷ்ணன், ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் ரம்யா கிருஷ்ணன் இடம்பெற்ற காட்சிகளுக்கு டப்பிங் பேச வேண்டியது இருந்தது.
ஆதலால் டப்பிங் ஸ்டூடியோவுக்கு ரம்யா கிருஷ்ணன் மாலை 6 மணிக்கு வந்திருக்கிறார். ஆனால் பலரும் அப்போது மாறி மாறி டப்பிங் பேசிக்கொண்டிருந்தார்களாம்.
அவர்களெல்லாரும் டப்பிங் பேசி முடித்த பிறகு ரம்யா கிருஷ்ணன் பேசத்தொடங்கியிருக்கிறார். அவர் டப்பிங் பேசத்தொடங்கியபோது மணி இரவு 12 மணி ஆகிவிட்டதாம். அவர் டப்பிங் பேசி முடித்தபோது அதிகாலை 5 மணி ஆகிவிட்டதாம். ஆனால் அத்திரைப்படத்தில் நடித்ததற்காக சம்பளமே வாங்கவில்லையாம். எனினும் தயாரிப்பாளர் அவருக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்பதற்காக ஒரு தங்க காசு வாங்கிக்கொடுத்தாராம்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பெண் வேடத்தில் கலக்கிய திரைப்படங்கள்… ஆனால் இதில் சோகம் என்னன்னா!!