Cinema History
ரத்தக்கண்ணீர் படத்துக்கு அப்புறம் எம்.ஆர்.ராதாவுக்கு பட வாய்ப்பே வரலைன்னு சொன்னா உங்களால நம்பமுடியுதா!!
1954 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா நடிப்பில் வெளிவந்த “ரத்தக்கண்ணீர்” திரைப்படம் அக்காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் காலத்தை தாண்டியும் பேசப்படும் திரைப்படமாகவும் அமைந்தது. இப்போதும் கூட எம்.ஆர்.ராதா என்ற பெயரை கேட்டாலே நமக்கு நினைவில் வருவது “ரத்தக்கண்ணீர்”தான்.
ஆனால் “ரத்தக்கண்ணீர்” திரைப்படத்தை தொடர்ந்து எம்.ஆர்.ராதாவுக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லையாம். இந்த நிலையில் பிரபல நடிகரான வி.கே.ராமசாமி “நல்ல இடத்து சம்மந்தம்” என்ற பெயரில் ஒரு கதையை எழுதியிருந்தார். அந்த கதையை அவரது நண்பரும் இயக்குனருமான ஏ.பி.நாகராஜனுடன் வி.கே.ராமசாமி இணைந்து தயாரிப்பதாக இருந்தது.
அந்த தருணத்தில்தான் எம்.ஆர்.ராதா ஏபி நாகரானின் அலுவலகத்திற்கு வந்தாராம். “உங்கள் படங்கள் எல்லாம் நன்றாக போகிறது. நானும் எவ்வளவோ நாடகங்கள் எல்லாம் போட்டு பார்த்துவிட்டேன். இப்போதெல்லாம் நாடகங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. எனது நாடகக் குழுவில் இருப்பவர்களுக்கு சாப்பாடு போட முடியவில்லை.
ஆதலால் இனி சினிமாவில் முழுவதுமாக இறங்கி நடிக்கப்போவதாக முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. உங்களது அடுத்த படத்தில் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுங்கள்” என கூறினாராம்.
அந்த காலகட்டத்தில் எம்.ஆர்.ராதா நாடகத்துறையில் மிகப் பிரபலமாக இருந்ததால் அவரின் மீது பலருக்கும் மதிப்பு இருந்தது. “நல்ல இடத்து சம்மந்தம்” திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்கான நடிகர்களை வி.கே.ராமசாமி ஏற்கனவே தேர்ந்தெடுத்துவிட்டார். அதில் ஒரே ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை மட்டும் ஒப்பந்தம் செய்யவில்லை. அந்த கதாப்பாத்திரத்துக்கு டி.கே.ராமச்சந்திரன் என்ற பிரபல நடிகரை ஒப்பந்தம் செய்யலாம் என முடிவெடுத்திருந்தார் வி.கே.ராமசாமி.
ஆனால் தற்போது எம்.ஆர்.ராதாவே நேரடியாக வந்து வாய்ப்பு கேட்பதால் தர்மசங்கடத்திற்கு ஆளானார் வி.கே.ராமசாமி. ஏனென்றால் எம்.ஆர்.ராதா வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் டி.கே.ராமச்சந்திரனை ஒப்பந்தம் செய்வதற்காக மேனேஜரை அவரது வீட்டிற்கு அனுப்பியிருந்தார் வி.கே.ராமசாமி.
இந்த விஷயத்தை எம்.ஆர்.ராதாவிடம் வெளிப்படையாகவே கூறினார் வி.கே.ராமசாமி. “அதனால் என்ன, டி.கே.ராமச்சந்திரனிடம் நான் அந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறிவிடு. அடுத்த படத்தில் டி.கே,ராமச்சந்திரனை நடிக்க வைத்துவிடு” என சாதாரணமாக கூறினாராம் எம்.ஆர்.ராதா.
எம்.ஆர்.ராதாவே நேரில் வந்து கேட்பதால் அவரது கோரிக்கையை நிறைவேற்றாமல் இருக்கமுடியாது என்று நினைத்த வி.கே.ராமசாமி “நல்ல இடத்து சம்மந்தம்” திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவை நடிக்க வைத்தார்.
என்னதான் “ரத்தக்கண்ணீர்” திரைப்படம் மாபெறும் வெற்றியடைந்திருந்தாலும், “நல்ல இடத்து சம்மந்தம்” திரைப்படம்தான் எம்.ஆர்.ராதாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.