
Cinema History
சினிமாவில் தந்திர காட்சிகளில் கலக்கிய ரவிகாந்த் நிகாய்ச்
தற்போதுள்ள சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் மாயாஜாலமாக செய்யலாம். இருக்கவே இருக்கு கம்ப்யூட்டர்.
கம்ப்யூட்டரில் எதை எப்படி வேண்டுமானாலும் செய்வதற்கும் ஒரு படத்தை கிராபிக்ஸிலேயே முழுவதும் முடிப்பதற்கும் கூட தற்போது வசதி உள்ளது.
எந்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, நமக்கு என்ன எல்லாம் கற்பனை வளம் இருக்கிறதோ நடைமுறையில் எதை எதை செய்ய முடியாதோ அதை எல்லாம் கம்ப்யூட்டரை பயன்படுத்தி தற்போதுள்ள அதி நவீன சினிமாவில் செய்ய முடியும்.
ஆனால் அந்தக்கால சினிமாக்களில் குறிப்பாக ஒரு புராணப்படமாக இருந்தாலும் சரி தந்திரமான காட்சிகளாக இருந்தாலும் சரி பெரிய ஜாடிக்குள் இருந்து வருவதாக இருந்தாலும் சரி, பெரிய மூடிக்குள் இருந்து வருவதாக இருந்தாலும் சரி. பிரிட்ஜில் உள்ள காய்கறிகளில் இருந்து வருவதாக இருந்தாலும் சரி, வில் அம்பு விட்டால் அது பாம்பாக மாறுவது, மீனாக மாறுவது, மலராக மாறுவது, வாய்க்குள் உணவுபொருட்கள் பறந்து போவது என பல்வேறு தந்திர காட்சிகளுக்கு பலரும் விரும்பி அழைப்பது ரவிகாந்த் நிகாய்ச் என்ற தந்திரக்காரரை. இவர் கம்ப்யூட்டர் பயன்படுத்தி எதுவும் செய்யவில்லை அவர் இருந்த காலங்களில் கம்ப்யூட்டரும் இல்லை. தன்னுடைய சொந்த அறிவை பயன்படுத்தி தான் சுயமாக சிந்தித்து தந்திரக்காட்சிகளை எடுப்பார். இதில் இவர்தான் பெஸ்ட் என்பதால் மும்பையில் இருந்து எல்லா இயக்குனர்களும் , தயாரிப்பாளர்களும் அது சம்பந்தமான காட்சிக்கு இவரைத்தான் அணுகுவர்.
அந்த அளவுக்கு அந்தக்காலத்தில் வந்த புராணப்படங்களில் , மாயாஜால படங்களில் ரவிகாந்த் நிகாய்ச்சின் கை வண்ணம் தந்திரக்காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளது.
பட்டணத்தில் பூதம் படத்தில் பூதம் செய்யும் அட்டாகாசம், பிரமாண்ட வாகனம் , அதில் வரும் மாயாஜால காட்சிகள் எல்லாம் ரவிகாந்த் நிகாய்ச்சின் கை வண்ணமே.
இவர் 80களின் இறுதி வரை பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது .ஒன்றுமே இல்லாத ஒரு படத்தில் நடித்தவர்கள் பற்றி எல்லாம் இணையத்தில் நிறைய தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது ஆனால் தமிழ் மற்றும் ஹிந்தி, மற்றும் தென்னக மொழிகள் அனைத்திலும் கலக்கிய அதுவும் கம்ப்யூட்டர் இல்லாத காலத்தில் கைகளாலேயே தந்திரக்காட்சிகளை உருவாக்கி கலக்கிய ரவிகாந்த் நிகாய்ச் என்ற கலைஞனை பற்றி அதிக தகவல்கள் இணையத்தில் இல்லாதது துரதிருஷ்டம் ஆகும்
கம்ப்யூட்டர் இல்லாத அந்த காலத்தில் தந்திரக்காட்சிகள் எடுப்பது மிக சிரமமான வேலை. அதை சிரமேற்கொண்டு மிக தெளிவாக இயக்கிய ஜாம்பவானாக இவர் இருந்திருக்கிறார். நேற்று நமது தளத்தில் வெளியிட்ட மனைவி ரெடி படத்தில் கூட இளையராஜா இசையில் ஒரு பாடல் வரும் உடம்பு இப்போ தேறி போச்சு என்ற எஸ்.பி.பி பாடிய அந்த பாடலில் கதாநாயகன் பாண்டியராஜனும், கதாநாயகி சிந்தாமணியும் ஹார்லிக்ஸ் பாட்டில் மற்றும் ஃபோர்ன்விட்டா பாட்டிலில் இருந்து வருவது போல காட்சி வரும் இந்த காட்சிகளை இயக்கியது ரவிகாந்த் நிகாய்ச் தான் இப்படி பல காட்சிகளை இவர் இயக்கியுள்ளார். ராஜரிஷி படத்தில் விஸ்வாமித்ர மஹரிசியாக வரும் சிவாஜிகணேசன் திரிசங்கு சொர்க்கத்தை உருவாக்குவார் அது போல காட்சிகளை எல்லாம் தத்ரூபமாக அமைத்து கொடுத்தவர் இவர்.
இவர் சாண்டோ சின்னப்பா தேவரின் நண்பர் ஆவார் ஹிந்தி நடிகரின் ராஜேஸ்கண்ணாவின் நெருங்கிய நண்பர் இவர் என்பதும் இவரை வைத்துதான் ராஜேஸ்கண்ணாவின் கால்ஷீட்டை சாண்டோ சின்னப்பா தேவர் வாங்கினார் என்பது மட்டுமே இவரை பற்றி உள்ள கூடுதல் தகவல்.
புராணப்படங்கள் மட்டுமின்றி சாதாரண காதல் படங்கள் பலவற்றிலும், சில பாடல் காட்சிகளிலும் ரவிகாந்த் நிகாய்சின் கை வண்ணமே 80களில் மேலோங்கியுள்ளது.