ரீ என்ட்ரி கொடுத்தும் பிரயோஜனம் இல்ல… சுத்தமா செல்ஃப் எடுக்காத டாப் நடிகர்கள்…

by Arun Prasad |
ரீ என்ட்ரி கொடுத்தும் பிரயோஜனம் இல்ல… சுத்தமா செல்ஃப் எடுக்காத டாப் நடிகர்கள்…
X

சினிமா என்பது ஒரு கனவு தொழிற்சாலை என கூறுவார்கள். சொன்னவர்கள் இதனை தெரிந்து கூறினார்களா தெரியாமல் கூறினார்களா என தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் இது சரிதான். ஏனென்றால் அந்த கனவு எப்போது வேண்டுமானாலும் கலையலாம்.

ஒரு காலத்தில் டாப் நடிகர்களாக மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற கதாநாயகர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் காலப்போக்கில் சில காரணங்களால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தேடும் அளவுக்கு காணாமல் போய்விடுவார்கள். இப்படி சினிமாவில் மேகம் போல் மறைந்து போனவர்கள் பலர்.

ஆனாலும் சிலர் ஏதோ ஒரு நம்பிக்கையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பார்கள். சிலர் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தாலும் மக்களால் கண்டுகொள்ளப்படமாட்டார்கள். ஆனால் பிக் அப் எடுக்காது. இவ்வாறு ரீ என்ட்ரி கொடுத்தும் பிக் அப் எடுக்காத ஆனால் ஒரு காலத்தில் டாப்பில் இருந்த நடிகர்கள் சிலரை பார்க்கலாம்.

கரண்:

தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த கரண், தமிழில் ரஜினிகாந்த் நடித்த “அண்ணாமலை” திரைப்படத்தின் மூலம் ஒரு இளம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் “நம்மவர்”, “சந்திரலேகா”, “லவ் டூடே” என பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திரக் கதாப்பாத்திரமாகவும் ஜொலித்து வந்தார்.

ஆனால் திடீரென அவரது கேரியர் சருக்க தொடங்கியது. எனினும் திடீரென கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுத்தார். “கொக்கி”, “கருப்பசாமி குத்தகைக்காரர்”, “காத்தவராயன்”, “மலையன்”, “தம்பி வெட்டோட்டி சுந்தரம்” என பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் எந்த திரைப்படமும் அணுவளவும் வெற்றிபெறவில்லை. இறுதியாக 2016 ஆம் ஆண்டு “உச்சத்தில சிவா” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த கரண் அப்படியே காணாமல் போனார்.

பிரசாந்த்:

90களில் இளம் பெண்களின் கனவு கண்ணனாகவும் சாக்லேட் பாயாகவும் திகழ்ந்தவர் பிரசாந்த். அஜித், விஜய் படங்கள் போட்டி போட்டிக்கொண்டிருக்கையில் இவரது திரைப்படங்கள் சைலண்ட்டாக வந்து ஹிட் அடித்துவிட்டு போகும். 1990 ஆம் ஆண்டு “வைகாசி பிறந்தாச்சு” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான பிரசாந்த், அதன் பின் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி என பல திரைப்படங்களில் நடித்தார். தமிழின் முன்னணி இயக்குனர்களான பாலு மகேந்திரா, ஷங்கர், மணி ரத்னம் என பல இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக பட்டையை கிளப்பியவர்.

ஆனால் நேரம் என்னவோ பின்னாளில் வேலையை காட்டியது. ஒரு கட்டத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் கைக்கொடுக்கவில்லை. “தகப்பன் சாமி”, “மம்பட்டியான்” என வெரைட்டியாக ஒரு ரீ என்ட்ரி கொடுக்கலாம் என நினைத்த பிரசாந்த்துக்கு இறுதியில் அதெல்லாம் வினையாகிப்போனது. தற்போது “அந்தகன்” என்ற திரைப்படம் மூலம் இரண்டாவதாக ரீ என்ட்ரி கொடுக்கிறார். அது என்ன ஆகப்போகுது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

மோகன்:

தமிழ் ரசிகர்களிடம் மைக் மோகன் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்ட மோகன், ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு இணையான ஒரு டாப் நடிகராக திகழ்ந்தார். இவரது திரைப்படங்களுக்கு பெரும்பாலும் இளையராஜா தான் இசையமைப்பார். இளையராஜா-மைக் மோகன் காம்போ இன்று வரையும் மிகப் பிரபலமான ஒன்று.

ஆனாலும் திடீரென ஒரு பெரும் சரிவை கண்டார். அதற்கு காரணம் இவருக்கு பின்னணி குரல் கொடுத்த சுரேந்தர் இவருடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டது தான் என சிலர் கூறுகின்றனர். எனினும் பல குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் இவருக்கு வாய்ப்புகளாக வந்தாலும் அதனை எல்லாம் மறுத்து “நடித்தால் கதாநாயகனாகத் தான் நடிப்பேன்” என ஒற்றை காலில் நின்றார். எனினும் கடந்த 2008 ஆம் ஆண்டு “சுட்டப்பழம்” என்ற திரைப்படம் மூலம் மீண்டும் கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அத்திரைப்படம் அட்டர் ஃப்ளாப் ஆனது. எனவே தற்போது “ஹாரா” என்ற ஒரு திரைப்படத்தில் மோகன் நடித்து வருகிறார். இத்திரைப்படம் கைக்கொடுக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

ராமராஜன்:

80களின் வெற்றி கதாநாயகனாக மக்கள் மனதில் இடம்பெற்றிருந்தவர் ராமராஜன். இவர் நடித்த “கரகாட்டக்காரன்”, “வில்லுப்பாட்டுக்காரன்” போன்ற திரைப்படங்களை இப்போதும் ரசித்துப் பார்ப்பவர்கள் பலர் உண்டு.

பெரும்பாலும் கிராமத்து கதையம்சங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வந்த ராமராஜன் ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகர். ஆதலால் தனது திரைப்படங்களில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற காட்சிகளில் நடிக்க மறுத்தார்.

“ஒன்று எங்கள் சாதியே”, “அம்மன் கோவில் வாசலிலே” போன்ற பல திரைப்படங்களை இயக்கி நடித்தும் உள்ளார் ராமராஜன். எனினும் ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். எனினும் “மேதை” என்ற திரைப்படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். எனினும் அத்திரைப்படம் பிக் அப் எடுக்கவில்லை.

ஜீவன்:

“காக்க காக்க” திரைப்படத்தில் வில்லனாக வந்து கலக்கிய ஜீவன் “யுனிவர்சிட்டி” என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் “திருட்டுப் பயலே”, “நான் அவனில்லை” போன்ற வெற்றித்திரைப்படங்களில் நடித்தார் ஜீவன். ஆனால் அதன் பின் அவர் நடித்த சில திரைப்படங்கள் பெரும் தோல்வியை கண்டது.

எனினும் “பாம்பாட்டம்”, “ஜெயிக்குற குதிரை” போன்ற திரைப்படங்களில் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் நடித்தார். ஆனால் அத்திரைப்படங்கள் இன்னும் வெளிவரவில்லை.

பரத்:

ஷங்கர் இயக்கிய “பாய்ஸ்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான பரத், அதன் பின் “காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து ஹிட் கதாநாயகனாக மாறினார். அதன் பின் “எம்டன் மகன்”, “வெயில்” போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்த பரத், அதன் பின் பெரும் சருக்கலை கண்டார்.

எனினும் “555” என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த பரத், செல்ஃப் எடுக்காததால் மீண்டும் காணாமல் போனார். அதனிடையே சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்தார். சமீபத்தில் ஹிந்தியில் “ராதே” என்ற திரைப்படத்தில் சல்மான் கானுடன் நடித்தார். எப்படியாவது மீண்டும் ஜொலிக்க வேண்டும் என தவழ்ந்து கொண்டிருக்கும் பரத், தற்போது “முன்னரிவான்”, “மிரள்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அப்பாஸ்:

பிரசாந்த் போலவே ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக திகழ்ந்து வந்தவர் அப்பாஸ். “காதல் தேசம்”, “பூச்சூடவா” என பல காதல் திரைப்படங்களில் நடித்த அப்பாஸ், சிறு சிறு கதாப்பாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதன் பின் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் வகையில் “குரு என் ஆளு”, “ராமானுஜம்” போன்ற திரைப்படங்களில் நடித்தார். எதுவும் கைக்கொடுக்காததால் சினிமாத்துறையே வேண்டாம் என தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

ஜித்தன் ரமேஷ்:

தமிழில் “ஜித்தன்” என்ற வெற்றி திரைப்படம் மூலம் அறிமுகமான ரமேஷ், அதன் பின் “ஜித்தன்” ரமேஷ் என்றே அழைக்கப்பட்டார். ஆனால் அந்த பெயரால் அவருக்கு எந்த பயனும் இல்லாமல் போனது. அதன் பின் இவர் நடித்த அனைத்து படங்களும் மண்ணை கவ்வியது.

ஒரு நீண்ட இடைவேளைக்கு பின் “பிள்ளையார் தெரு கடைசி வீடு” என்ற திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அது எந்த விதத்திலும் கைக்கொடுக்கவில்லை. அதன் பின் “ஒஸ்தி” திரைப்படத்தில் சிம்புவுக்கு தம்பியாக நடித்தார்.

திடீரென “பிக் பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சிக்குள் நுழைந்த ஜித்தன் ரமேஷ் ஓரளவு சிறப்பாகவே விளையாடினார். எனினும் அதன் பின்னும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்.

நகுல்:

பரத்துடன் இணைந்து “பாய்ஸ்” திரைப்படத்தில் அறிமுகமான நகுல், அதன் பின் “காதலில் விழுந்தேன்”, “மாசிலாமணி” போன்ற திரைப்படங்களில் நடித்தார். அத்திரைப்படங்கள் ஓரளவு ஹிட் அடித்தன.

எனினும் அதன் பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் கைக்கொடுக்கவில்லை. “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கலாம் என நினைத்தார். ஆனால் அத்திரைப்படமும் கையை கடித்து வைத்தது. தற்போது படங்களில் கவனம் செழுத்தாமல் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவர் சிறந்த பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷாம்:

தொடக்கத்தில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ஷாம், தான் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான “12பி” திரைப்படத்தின் மூலம் ஓரளவு மக்களிடையே அறியப்பட்டார். அதன் பின் இவர் நடித்த “இயற்கை” திரைப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் தமிழில் எதுவும் கைக்கொடுக்கவில்லை என்பதால் தெலுங்கில் சில திரைப்படங்களில் சைடு கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

எனினும் “பொறம்போக்கு” என்ற திரைப்படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கலாம் என நினைத்தார். ஆனால் அத்திரைப்படமும் எடுபடவில்லை. தற்போது விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

“எந்த துறையை வேண்டுமானாலும் நம்பிவிடலாம், ஆனால் சினிமாவை நம்பிவிட முடியாது, அது என்றைக்கு ஏற்றிவிடும் என்றைக்கு இறக்கிவிடும் என்றே தெரியாது” என பலரும் கூறுவர். அதற்கு எடுத்துக்காட்டான நபர்களாக இவர்கள் திகழ்கிறார்கள் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது தான்.

Next Story