ரியல் ஆட்டோ டிரைவரை ஹீரோ ஆக்கிய பிரபல இயக்குனர்… செம மேட்டரா இருக்கே!!
கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் “மேற்கு தொடர்ச்சி மலை”. இத்திரைப்படத்தை லெனின் பாரதி இயக்கியிருந்தார். மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மலை வாழ் மக்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாக படமாக்கி இருப்பதாக பலரும் பாராட்டி வந்தனர்.
இளையராஜாவின் பின்னணி இசை இத்திரைப்படத்திற்கு மிகவும் பலமாய் அமைந்தது. அதே போல் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் இத்திரைப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்சென்றது.
இந்த நிலையில் பா. ரஞ்சித் தயாரிப்பில் லெனின் பாரதி ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு “கிழக்கு இந்திய கம்பெனி” என்று டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தில் லெனின் பாரதி ஒரு புது கதாநாயகனை அறிமுகப்படுத்த உள்ளாராம். அதாவது ரமேஷ் என்ற ஆட்டோ ஓட்டுனர் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.
இதற்கு முன் லெனின் பாரதி இயக்கிய “மேற்கு தொடர்ச்சி மலை” திரைப்படத்திலும் புதிய முகங்களையே நடிக்க வைத்திருந்தார். இதனை தொடர்ந்து லெனின் பாரதி புதிதாக இயக்கும் திரைப்படத்திலும் புதுமுக நடிகரை அறிமுகப்படுத்த உள்ளார்.
பா.ரஞ்சித் இதற்கு முன் “பரியேறும் பெருமாள்”, “ரைட்டர்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, “சேத்துமான்”, “குதிரைவால்” போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.