மணிரத்தினத்தை கால்கடுக்க காக்க வைத்த இளையராஜா!.. அங்கதான் எல்லாம் ஸ்டார்ட் ஆச்சி!..
70களின் இறுதியில் இசையமைப்பாளாக நுழைந்து மண் வாசனை மிக்க பல பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. இவர் இசையமைக்க துவங்கிய பின்னர்தான் ஆடியோ கேசட்டுகள் அதிகமாக விற்க துவங்கியது. 80 களில் இவரை நம்பித்தான் பல படங்களே உருவாகியது. ஏனெனில், தன்னுடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் மொக்கை படத்தை கூட வெற்றிப்படமாக மாற்றிவிடும் வித்தை தெரிந்தவர் இளையாராஜா.
இதன் காரணமாக சினிமாவை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனாக இளையராஜா பார்க்கப்பட்டார். அதேநேரம் அவரின் முன் கோபம், ஈகோ இதெல்லாம் சில பெரிய இயக்குனர்களுக்கு நெருடலை கொடுத்தது. ஆனாலும், அவரை விட்டால் வேறு வழியில்லை என்பதால் அமைதியாக இருந்தனர். அதேநேரம், ஏ.ஆர்.ரகுமான், தேவா உள்ளிட்ட சில இசையமைப்பாளர்கள் வந்ததும் பலரும் அவர்களின் பக்கம் சென்றனர். இதனால் இளையராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தது.
இளையராஜாவை விட்டு பிரிந்த முக்கிய இயக்குனர்களில் மணிரத்னமும் ஒருவர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தனது திரைப்படங்கள் மூலம் புதிய அனுபவத்தை கொடுத்தவர் மணிரத்னம். மணிரத்னம் இயக்கிய இதயக்கோவில், பகல் நிலவு, மௌன ராகம், இதயத்தை திருடாதே, நாயகன், தளபதி ஆகிய படங்களுக்கு இளையராஜவே இசையமைத்தார். ஆனால், ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் கை கோர்த்தார் மணிரத்னம். இப்போது வரை அந்த கூட்டணியே தொடர்கிறது.
மணிரத்னம் இளையராஜாவை பிரிந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முக்கிய காரணத்தை சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் ஊடகம் ஒன்றில் கூறினார்.
இயக்குனர் பாலச்சந்தருக்கும் இளையராஜாவுக்கும் புதுப்புது அர்த்தங்கள் படத்திலேயே பிரச்சனை ஏற்பட்டு இனிமேல் பாலச்சந்தர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என இளையராஜா கூறிவிட்டார். அது நடந்து மூன்று வரும் கழித்து பாலச்சந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்க உருவான திரைப்படம்தான் ரோஜா.
இந்த படத்தில் இசையமைப்பது தொடர்பாக இளையராஜாவை பார்க்க மணிரத்னம் சென்றிருந்தபோது பாலசந்தர் மேலிருந்த கோபத்தில் ‘அந்த மரத்தின் அடியில் போய் நில்லுங்கள் உங்களை கூப்பிடுகிறேன்’ என இளையராஜா சொல்லிவிட, ராஜாவை பார்க்க வந்த கும்பலோடு ஒருவராக மணிரத்னம் நின்று கொண்டிருந்தாராம். இதைக்கேள்விப்பட்டு பாலச்சந்தர் அங்கு வந்து ‘நீங்கள் இங்கே நிற்க வேண்டாம். காரில் ஏறுங்கள்’ என அவரை கூட்டி சென்றுவிட்டாராம்.
அதன்பின் இளையராஜா வேண்டாம். வேறு ஒருவரை இப்படத்திற்கு இசையமைக்க வைக்கலாம் என இருவரும் முடிவெடுத்த பின்னர்தான் ஏ.ஆர்.ரகுமான் உள்ளே வந்திருக்கிறார். இப்படித்தான் இளையராஜா - மணிரத்னம் கூட்டணி பிரிந்ததாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.