பிரபல இயக்குனரிடம் கைமாறும் ரெட் ஜெயன்ட் நிறுவனம்… இனி அரசியலில் மட்டும்தான் ஃபோகஸ்… உதயநிதி கறார்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த உதயநிதி, சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஒரு பேட்டியில் பேசியபோது “அரசியலுக்கு வருவதில் ஈடுபாடு இல்லை” என கூறியிருந்தார். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்துதான் தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்.
அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய உதயநிதி, இனிமேல் சினிமாவில் நடிக்கப்போவதில்லை எனவும். கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறினார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த “மாமன்னன்” திரைப்படமே தனது கடைசி திரைப்படம் எனவும் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் சமீப காலமாக பல திரைப்படங்களை வெளியிட்டு வந்தார். அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ள “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் வெளியிட உள்ளது. அதே போல் கமல்ஹாசனின் “இந்தியன் 2”, “KH 234” போன்ற திரைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் தயாரித்தும் வருகிறார்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைமாறவுள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. அதாவது உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி இனி ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் உரிமையாளராக பொறுப்பேற்றுக்கொள்வார் என கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி, தமிழில் “வணக்கம் சென்னை”, “காளி” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த “பேப்பர் ராக்கெட்” என்ற வெப் சீரீஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.