Cinema History
ஐந்து நாட்களில் முழு படத்தையும் முடித்து கொடுத்த ரேவதி.. அது என்ன படம் தெரியுமா?..
1980களில் தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் ரேவதி. இவர் பாரதிராஜா இயக்கிய “மண் வாசனை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து “கை கொடுக்கும் கை”, “புதுமைப் பெண்”, “வைதேகி காத்திருந்தாள்” போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகையாக வளர்ந்தார்.
1985 ஆம் ஆண்டு பாண்டியன், பாண்டியராஜன், சீதா, ரேவதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆண் பாவம்”. இத்திரைப்படத்தை பாண்டியராஜனே இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பாண்டியராஜனின் கேரியரிலேயே முக்கிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது.
இத்திரைப்படம் உருவாகுவதற்கு முன்பு ரேவதியை இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்த பாண்டியராஜன், ரேவதியை ஒப்பந்தம் செய்ய சென்றார். ஆனால் ரேவதி அக்காலகட்டத்தில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்ததால் “ஆண் பாவம்” திரைப்படத்திற்கு கால்ஷீட் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால் பாண்டியராஜன் “உங்களால் எத்தனை நாட்கள் முடியுமோ, எனக்கு கொடுங்கள்” என கூறியிருக்கிறார். பாண்டியராஜன் இவ்வாறு கேட்டவுடன் தான் நடிக்க இருக்கும் படங்களின் கால்ஷீட் நாட்களை புரட்டிப் பார்த்து, “4 நாட்கள்தான் என்னால் கால்ஷீட் கொடுக்கமுடியும்” என ரேவதி கூறியிருக்கிறார்.
அதற்கு பாண்டியராஜன் “இன்னும் ஒரு நாள் கூடுதலாக 5 நாட்கள் தரமுடியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு ரேவதி “சரி, 5 நாட்கள் தருகிறேன். ஆனால் 5 நாட்களில் என் காட்சிகளை முடித்துவிடுவீர்களா?” என கேட்டிருக்கிறார்.
அதற்கு பாண்டியராஜன் “அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். அதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என கூறியிருக்கிறார். அவர் கூறியபடியே ஐந்து நாட்களில் ரேவதி இடம்பெற்ற அனைத்து காட்சிகளையும் படமாக்கிவிட்டாராம் பாண்டியராஜன். எனினும் “ஆண் பாவம்” திரைப்படத்தில் ரேவதி பல காட்சிகளில் தென்பட்டார். 5 நாட்களில் படமாக்கப்பட்டதா என்ற ஆச்சரியம் வராமல் இருக்காது…