ரேவதி என்ற பெயருக்கு பின்னால் உள்ள சுவாரசிய தகவல்… எல்லாம் பாரதிராஜாவோட சென்டிமென்ட்தான்…
1980களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் ரேவதி. “புதுமை பெண்”, “மௌன ராகம்”, “புன்னகை மன்னன்”, “கிழக்கு வாசல்” ஆகிய பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த ரேவதி தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம் ‘மண் வாசனை”. இந்த படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார்.
“மண் வாசனை” திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது முதலில் இந்த திரைப்படத்தில் ஷோபனாவைத்தான் கதாநாயகியாக தேர்ந்தெடுத்திருந்தனர். ஆனால் அவர் அப்போது 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாலும், பொதுத்தேர்வு நெருங்கி வந்ததன் காரணமாகவும் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இதனை தொடர்ந்து “மண் வாசனை” திரைப்படத்தின் கதாநாயகிக்கான தேடல் தீவிரமாக தொடங்கியது. அப்போது பாரதிராஜாவின் சகோதரரான ஜெயராஜின் வீட்டில் குடியிருந்த சந்தோஷ் என்பவரின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவராக இருந்தார். சந்தோஷின் தந்தையை பார்க்க கேலுன்னி நாயர் என்ற ராணுவ மேஜர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வருவாராம்.
மேஜர் கேலுன்னி நாயருக்கு இரண்டு மகள்கள் இருந்தார்களாம். அதில் மூத்த மகளின் பெயர் ஆஷா. இவர் 8 வயது முதலே பரதநாட்டியம் கற்றுவந்தாராம். இதனை கேள்விபட்ட பாரதிராஜா ஆஷாவின் புகைப்படத்தை பார்த்தார். ‘மண் வாசனை” படத்தின் கதாநாயகி கதாப்பாத்திரத்திற்கு இந்த பெண் பொருத்தமாக இருப்பார் என பாரதிராஜா முடிவு செய்தாராம்.
இதனை தொடர்ந்து ஆஷாவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார் பாரதிராஜா. அதற்கு முன் பாரதிராஜா இயக்கிய “கிழக்கே போகும் ரயில்” திரைப்படத்தில் ராதிகாவை அறிமுகப்படுத்தினார். அதே போல் “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தில் ராதாவை அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. இந்த இருவரின் பெயர்களும் “R” என்ற எழுத்திலேயே தொடங்கியதால், ஆஷாவிற்கும் “R” என்ற எழுத்தில் தொடங்குமாறு ஒரு பெயரை வைக்க முடிவு செய்தனராம் படக்குழுவினர். அதன் படிதான் ரேவதி என்ற பெயரை ஆஷாவிற்கு சூட்டினாராம் பாரதிராஜா. இவ்வாறுதான் ரேவதியை “மண் வாசனை” திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினாராம் பாரதிராஜா.