செமயா செஞ்சிவிட்ட சிவகார்த்திகேயன்!...ரசிகர்களை சோதிக்கும் பிரின்ஸ்...
ஆங்கிலத்தில் பிரின்ஸ் என்றால் இவளரசர். அப்படி தான் வந்து போகிறார் சிவகார்த்திகேயன்.
சாதி, மதம், இனம் கடந்து நாடுகளுக்கு இடையே காதல் பயணத்தை மேற்கொண்டு அதை சுவாரசியமாக சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் அனுதீப்.
படத்தின் கதை என்று சொல்லப்போனால் பெரிதாக ஒன்றுமில்லை. இந்திய இளைஞன் பிரிட்டிஷ்காரப் பெண்ணைக் காதலிக்கிறான். அவ்வளவு தான்.
படத்தில் செலவு என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு பேக்கரி, ஒரு வீடு...அருகில் சில இடங்கள் அவ்வளவு தான்...!
சுதந்திரப் போராட்டத்தின் போது தாத்தாவை பிரிட்டிஷ்காரர்கள் கொன்றதால் பிரிட்டிஷ் என்றாலே வெறுத்துக்கொள்ளும் கேரக்டர் சத்யராஜ். சாதி, மதம், இனம் கடந்த காதலுக்கு ஆதரவைத் தருகிறார்.
சாதிச்சண்டையால் அடித்துக் கொள்ளும் மக்களுக்கு அரிவாளால் கீறி ரத்தத்தின் நிறத்தைக் காட்டி அவ்வப்போது விளக்குகிறார். தனது மகன் ஒரு பிரிட்டிஷ்காரியைக் காதலிக்கிறான் என்று தெரிந்ததும் பொசுக்கென்று பொங்கி எழுகிறார்.
நடிப்பில் தனக்கென்று பெரிதாக ஸ்கோர் முடியா என்றால் சிவகார்த்திகேயனுக்கு அப்படி எந்த ஒரு வாய்ப்பும் படத்தில் கொடுக்கப்படவில்லை. வழக்கமான நகைச்சுவைகளைக் கொடுத்திருந்தால் கூட படத்தைக் கொஞ்சம் ரசித்திருக்கலாம். பல இடங்களில் காமெடியைப் பார்;த்து யோசித்துத் தான் சிரிக்க வேண்டியுள்ளது.
சமூக அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியராக வருபவர் அந்தப் பாடத்தைப் பற்றி ஏதும் சொல்லித்தராமல் மாணவனின் காதல் கடிதத்தை சுவாரசியமாக படிப்பது லாஜிக் இல்லை. காதலியாக வரும் மரியாவைத் தமிழ் பேச வைப்பதற்காக இயக்குனர் பகீரதப் பிரயத்தனம் செய்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
காதலிக்கும் முகபாவனைகள் கொஞ்சம் கூட இல்லை. ஏதோ ஒரு உணர்ச்சியைக் காட்ட வேண்டும் என்பது போல காட்டுகிறார். காதலுக்கே உரிய நாணம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார் போல..!
படத்தில் சிவகார்த்திகேயனின் நடனம் அடிக்கடி கால்களுக்குள் எக்ஸ் போட வைக்கிறது. அதேபோல சில இடங்களில் கவுண்டமணியின் ஸ்டெப்களையும் நினைவூட்டுகிறது. படத்தில் கவுண்டர் கொடுக்காத காமெடி அவ்வளவாக ரசிக்கும்படியாக இல்லை.
குறிப்பாக பாட்டில்கார்டு என்றால் தெரியாதா என்று காய்கறி கடைக்காரரிடம் சிவகார்த்திகேயன் கேட்க, அவரும் தெரியாது என்றாலும் தெரிந்தது போல சமாளிக்க கடைசியில் இருவருக்கும் தெரியாது என்பது ரசிக்க வைக்கிறது.
அதேபோல சிவகார்த்திகேயனிடம் சத்யராஜ் உலகத்திலேயே என்னை மாதிரி பையனோட ப்ரண்ட்லியா பழகுற வித்தியாசமான அப்பாவோட லிஸ்ட்ட எடுத்துக்கிட்டா அதுல முத ஆளு நான்தான்...அது உனக்கு தெரியுமா என சத்யராஜ் கேட்க, அந்த லிஸ்ட்ட எழுதுனதே நீங்க தானப்பா என்கிறார்.
அதே போல மரியா, சிவகார்த்திகேயனிடம் காதலுக்கான காரணத்தைக் கேட்கும்போதும், அவர் மீது காதல் ஏற்படும் போதும் யு ஆர் ஜஸ்ட் லைக் அஸ் பிராங் என்கிறார். அந்த பிராங் யாரு? அவன்கிட்ட நான் இப்பவே பேசுறேன்னு சிவகார்த்திகேயன் சொல்வது இளம் ஜோடிகளுக்கு சிரிப்பை வரவழைக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சியில் தேசம்னா என்ன காதல்னா என்ன? ஹியூமானிட்டின்னா என்னன்னு சிவகார்த்திகேயன் மினிலக்சரே எடுத்ததும் படம் சுபத்தில் முடிகிறது.
தெரியாது என்ற விதத்தில் மனிதர்கள் நாலு விதமாக இருக்கிறார்கள் என மரியா உலகநாதனான சத்யராஜிடம் சொல்லும் டயலாக் நச்சென்று இருக்கிறது. அதேபோல படத்தில் வில்லனாக வரும் பிரேம்ஜி இவ்வளவு இளைச்சுட்டாரே என்று எண்ணும் அளவு ரொம்பவே ஒல்லியாக இருக்கிறார்.
உலகநாதன் அய்யாவோட பேரு என்னன்னு தெரியுமாடான்னு கேட்டா உங்களைப் பற்றி பக்கத்து ஊர்ல சின்ன பையன்கூட உலகநாதன்னு கரெக்டா சொல்லிட்டான் என காமெடியில் கலாய்ப்பது அருமை. அதேபோல மரியா சத்யராஜிடம் கும்முரு டுப்புருன்னா தமிழ்ல என்ன மீனிங்னு கேட்க சத்யராஜ் நெளிவது செம.
சூரி நட்புக்காக வந்து போகிறார். அவர் வரும்போதும் கூட அந்த அளவு சிரிப்பு வரவில்லை. ஆனந்தராஜ் டிப்டாப் போலீஸாக ஒரு காட்சியில் மட்டும் வந்து போகிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பெரியவரிடம் இதே மாதிரி ஒங்க ஊர்ல இதுக்கு முன்னாடி நடந்துருக்கா என கேட்கும் ரிப்போர்ட்டரிடம், பெரியவர் இது மாதிரி நடந்துருக்கு. ஆனா..இது தான் முதல் தடவைன்னு சொல்லும் நகைச்சுவை டக்கென்று சிரிப்பை வரவழைக்கிறது.
மொத்தத்தில் படத்தில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் கெமிஸ்ட்ரி ஒட்டவே இல்லை. படம் முழுவதும் யதார்த்தமாக இல்லாமல் சினிமாத்தனமாகவும் இல்லாமல் நாடகத்தனமாக இருப்பது தான் படத்தின் மைனஸ்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அதுவும் தீபாவளி திரை விருந்தாக வந்த படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி பெற்றதா என்றால் இப்படியும் ஒரு படமா...இப்படியும் ஒரு படமா...என படம் தொடங்கியதும் இருந்த ஒரு ஆர்வம்....இப்படியும் ஒரு படமா என நமக்குள் ஒரு சலிப்பை உண்டாக்கி விடுகிறது.
ஏ சென்டரில் மட்டும் ரசிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டது போல எண்ணத் தோன்றுகிறது. பிம்பிளிக்கி பிளாப்பி, ஜெஸிகா என அதிரடி ஆட்டம் போட வைக்கும் பாடலை இசை அமைப்பாளர் தமன் தந்திருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இணைந்த சத்யராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணி இருந்தும் படம் அந்த அளவு எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்பது தான் நிதர்சனம்.