Thug life: கமலும் மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே நாயகன் போல ஒரு படம் அல்லது அந்த படத்தை விட சிறப்பான ஒரு படமாக தக் லைஃப் இருக்கும் என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். அப்படி நினைத்துதான் டிக்கெட் வாங்கி படம் பார்த்தவர்கள். ஆனால், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு மாறாக படம் இருந்ததே படத்தின் தோல்விக்கு காரணம்.

நாயகன் படம் ஏன் ரசிகர்களுக்கு பிடித்தது என யோசித்தால் ஒன்று புரியும். நாயகன் படத்தில் வரும் வேலு நாயக்கர் நல்லவர். ஏழை மக்களே அவரின் உலகம். அவர்களின் நலனுக்காக அவர் எதுவும் செய்வார். கேங்ஸ்டர் என்றாலும் அதை மக்களை பாதுகாக்கவே. இன்ஸ்பெக்டரின் மகளை கற்பழித்தவனை தனது ஆட்களை அனுப்பி போட்டு தள்ளுவார். அதனால்தான் ரசிகர்கள் தங்களோடு வேலு நாயக்கரை கனெக்ட் செய்து கொண்டார்கள். நாலு பேருக்கு நல்லதுன்னா எது செஞ்சாலும் தப்பில்லை என்பதை மக்கள் ஏற்றுகொண்டார்கள்.

தக் லைப் படத்தில் கமல் ஒரு கேங்ஸ்டர். அது அவரின் தொழிலாக இருக்கிறதே தவிர மக்களுக்காக இல்லை. இதனாலேயே படம் விழுந்துவிடுகிறது. அதோடு, அவர் காம இச்சை கொண்டவர். வேலு நாயக்கர் விபச்சார விடுதியிலிருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், ரங்கராய சக்திவேல் அங்கிருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்து கீப்பாக வைத்துக்கொள்கிறார்.

இதனால், ரங்கராய சக்திவேலின் இமேஜே கீழே விழுந்துவிடுகிறது. படத்தின் முதல் காட்சியிலேயே கமல் கீப் வீட்டிற்குதான் போகிறார். மனைவியிடம் பொய் சொல்லி நடிக்கிறார். தன்னுடைய காதலியை சிம்பு அடைய முயற்சி செய்யும்போது துரோகம் என சொல்லி அவரை கொல்கிறார். சிம்பு செய்தது துரோகம் எனில் கமல் தனது மனைவி அபிராமிக்கு செய்தது மட்டும் துரோகம் இல்லையா? என்கிற கேள்வி ரசிகர்களின் மனதுக்குள் எழுகிறது.

வேலு நாயக்கர் நல்லவராக இருந்தாலும் கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்கிற ஒன் லைன் நாயகனில் இருந்தது. ஆனால், சிம்புவை கொன்றுவிட்டு கமல் விவசாயம் செய்கிறார். இப்படி கமலின் கதாபாத்திரத்தை சொதப்பி இருக்கிறார் மணிரத்னம். தனது தந்தை போன்ற கமலின் கீப் திரிஷாவை அடைய வேண்டும் என ஆசைப்படும்போதே சிம்புவின் இமேஜும் கீழே விழுந்துவிடுகிறது. 80களில் சில்க் ஸ்மிதா, அனுராதா போன்ற நடிகைகள் கவர்ச்சி நடனம் ஆடிவிட்டு, கதாநாயகனுக்கு உதவி செய்துவிட்டு இறந்து போய்விடுவார்கள். தக் லைப் படத்தில் திரிஷாவின் கதாபாத்திரமும் இப்படித்தான் இருக்கிறது. இதனாலேயே திரிஷாவின் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் ஒட்டவில்லை.

ரங்கராய சக்திவேல் கேங்ஸ்டராக என்ன செய்கிறார்? யாருக்காக செய்கிறார்? என எதுவும் சொல்லப்படவில்லை. எல்லா கதாபாத்திரங்களுமே மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. நாயகன் படத்தை விட பெட்டரான ஒரு படம் என கமல் சொன்னார். ஆனால், நாயகன் படத்தின் திரைக்கதையில் இருந்த நேர்த்தி, கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்த விதம் எதுவுமே தக் லைப் படத்தில் இல்லை. இதுவே ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது.

அதேபோல், படத்தின் ஸ்ருதிஹாசன் பாடிய விண்வெளி நாயகா பாடலும், தீ பாடிய ‘முத்தமழை’ பாடலும் படத்திலேயே இல்லை. தக் லைப் புரமோஷனில் சின்மயி முத்தமழை பாடலை பாடியது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தீ -யின் குரலை விட சின்மயி இனிமையாக பாடியிருக்கிறார் என சமூகவலைத்தளங்களில் பலரும் பேசினார்கள். ஆனால், படத்தில் அந்த பாடலே இடம் பெறவில்லை. இதுவும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக முடிந்துவிட்டது.

மேலும், படத்தில் அடுத்தடுத்து வரும் காட்சிகளை ரசிகர்களே யூகித்துவிடுவது படத்தின் பெரிய மைனஸ். அது கூட பராவாயில்லை. ரசிகர்களை முட்டாள் என நினைத்து அந்த காட்சிகளை வைத்ததுதான் மணிரத்னத்தை எல்லோரும் நக்கலடிக்க காரணமாக அமைந்துவிட்டது.

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.