விஜய் சேதுபதி மகன் ஹீரோவா கலக்கினாரா?.. ‘பீனிக்ஸ் வீழான்’ படம் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!..

தனது அண்ணனை கொலை செய்த விவகாரத்தில் எம்.எல்.ஏவை சூர்யா சேதுபதி கொன்றுவிட்டு சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளிக்குச் செல்கிறார். அரசியல்வாதியை கொன்றால் சும்மா விடுவார்களா? சூர்யா சேதுபதியை சிறையிலேயே தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகின்றனர். ஆனால், ஹீரோ சிக்குவாரா? சிக்கியவர்களை எல்லாம் சின்னா பின்னம் ஆக்குகிறார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நல்லா கொழுக்கு மொழுக்குன்னு சிந்துபாத் படத்தில் அப்பா கூட நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இதெல்லாம் வேலைக்காகாது அப்பா போலவே நாமும் ஹீரோவாக வேண்டும் என்றால் உடல் எடையை குறைக்க வேண்டும் ஜிம்முக்கு போக வேண்டும் என முடிவெடுத்து தனது உடல் எடையை குறைத்து ஆக்ஷன் ஹீரோவாக செம் ஃபிட்டாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய அனல் அரசு இந்த படத்தில் இயக்குனராக அவதாரமெடுத்துள்ள நிலையில், படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் எல்லாம் அனல் தெறிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால், சண்டைக் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதைக்கும் திரைக்கதைக்கும் கொடுக்காமல் சுமார் மூஞ்சி குமாராகவே இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படம் ரசிகர்களை கவராத நிலையில், அதை விட கொஞ்சம் பெட்டராகவே இந்த படம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, முத்துக்குமார், ஹரிஷ் உத்தமன் என மற்ற பிரபல நடிகர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். முதல் பாதி முழுக்க சில வார்த்தைகளை தவிர ஹீரோவின் வாயில் இருந்து எதுவுமே வரவில்லை. கை மட்டும் தான் பேசும் என படம் முழுக்க சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் சூர்யா சேதுபதி.
அடுத்தடுத்த படங்களில் இன்னமும் நல்ல நல்ல திரைக்கதைகளை தேர்வு செய்து, தன்னை முதலில் ஒரு நல்ல நடிகனாக நிரூபித்துக் கொண்ட பின்னர், ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்கலாம். பீனிக்ஸ் - எரிந்து எரிந்து பறக்கிறது!
ரேட்டிங்: 2.75/5.