விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் ரியோ ராஜும் ஒருவர். சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால், இவர் நடிப்பில் வெளியான ஜோ படம் இவருக்கு கை கொடுத்தது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, அதில் ஜோவின் நடிப்பு எல்லாமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று படம் ஹிட் அடித்தது. அந்த வரிசையில் ஜோ நடித்திருக்கும் திரைப்படம்தான் ஆண் பாவம் பொல்லாதது.
இன்று காலை தியேட்டர்களில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜோ படத்தில் நடித்த மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் வழக்கமாக காமெடி செய்யும் விக்னேஷ் காந்த் இந்த படத்தில் காமெடியோடு சேர்த்து ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.இந்த கால இளசுகளின் காதல், திருமணம், திருமண முறிவு, அதில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை இப்படம் அலசுகிறது. இந்த கால இளைஞர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஐடி துறையில் பணிபுரியும் ரியோ ராஜ் மாளவிகா மனோஜை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் முற்போக்கு சிந்தனை கொண்ட மாளவிகாவுக்கும் அவருக்கும் செட் ஆகாமல் விவாகரத்து வரை செல்கிறது. அதன்பின் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? அவர்கள் மீண்டும் இணைந்தார்களா? என்பதுதான் படத்தின் கதை. குறிப்பாக இந்த கால முற்போக்கு பெண்களிடம் மாட்டிக்கொண்டு கொண்டு முழிக்கும் இந்த கால இளைஞனாக கதையின் நாயகனை சித்தரித்துள்ளனர்.

இப்படத்தை இளைஞர்களுக்கு பிடிக்கும் படியாக மிகவும் சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கலையரசன். இன்று காலை இப்படம் தியேட்டரில் வெளியானாலும் நேற்று இரவு பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதை பார்த்த பலரும் படம் எப்படி இருக்கிறது என்று பதிவிட்டு வருகிறார்கள்.

புதிதாக திருமணமான இரு ஜோடிகளுக்கு இடையே நடக்கும் அழகான காதல், உறவு, காமெடி திரைப்படம். ரியோ ராஜும், மாளவிகா மனோஜும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆர்.ஜே.விக்னெஷ் காந்துக்கு நல்ல ரோல். அவரும் அசத்தலாக நடித்திருக்கிறார். படம் வின்னர்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
ரியோ ராஜுக்கும், மாளவிகா மனோஜுக்கும் இன்னொரு ஹிட் படம். இடைவேளை காட்சிக்கு முன் வரும் காட்சிகள் செம சிரிப்பு. இந்த படத்திற்கு பின் ஆ.ஜே.விக்னேஷ் காந்த் சினிமாவில் கொண்டாடப்படுவார். படத்தை கலையரசன் சிறப்பாக இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் சித்துகுமார் கொண்டாடப்பட வேண்டியவர் என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

ஆண் பாவம் பொல்லாதது படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதை பார்க்கும்போது ஜோ-வுக்கு பின் இந்த படமும் ரியோ ராஜுக்கு ஹிட் படமாக அமையும் என கணிக்கப்படுகிறது.
