Categories: latest news reviews trailers

டாப்புக்கு போகணும்!.. அப்பதான் நாமெல்லாம் இங்க ஒரு ஆளு!.. பைசன் டிரெய்லர் எப்படி இருக்கு?!..

Bison: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. துருவ் நடிப்பில் இதற்கு முன் இரண்டு படங்கள் வெளியானாலும் அந்த படங்கள் கவனம் பெறவில்லை. ஏனெனில் அதில் ஒன்று மற்ற மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது. இன்னொன்றில் அவரின் அப்பா விக்ரம்தான் ஹீரோ.

எனவேதான் ‘பைசன்தான் என்னுடைய முதல் படம்’ என அந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் துருவ் பேசியிருந்தார்.தென் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் மனத்தி கணேசன் வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

இந்த படத்தில் துருவின் அப்பாவாக பசுபதி நடித்திருக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க, இயக்குனர் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிறுவயதிலிருந்து கபடி விளையாடுவது மிகவும் ஆர்வம் கொண்டவராக துருவின் கதாபாத்திரம் டிரெய்லரில் காட்டப்பட்டிருக்கிறது. கபடி விளையாட்டை எப்படி விளையாட வேண்டும்.. கபடி விளையாட்டுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல் மற்றும் சாதிய பிரச்சனைகளை பைசன் படத்தில் மாரி செல்வராஜ் பேசி இருப்பது டிரெய்லரை பார்த்தாலே புரிகிறது.

மாரியின் மற்ற படங்களை போலவே பைசன் படத்தில் வரும் சாதியை ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான காட்சிகள் நம்மை அதிர வைக்கின்றன. கபடி விளையாட்டு உன்னை பிரச்சனையில் கொண்டு போய் விட்டு விடும் என துவக்கத்தில் பசுபதி கதாபாத்திரம் துருவை எச்சரிக்கிறது. அவர் சொன்னபடி துருவுக்கு பிரச்சனைகள் வர  அதன்பின் பசுபதி கதாபாத்திரம் என்ன செய்தது என்பதை காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் இறுதியில் ‘இது பத்தாது.. உச்சத்துக்கு போ.. டாப்புக்கு போ.. அப்பதான் நாம் இங்க ஒரு ஆளு’ என பசுபதி பேசும் வசனங்களும் இடம் பெற்றிருக்கிறது. மாரியின் முந்தைய படங்கள் போலவே பைசன் படத்தில் கபடி விளையாட்டில் சாதி எப்படி விளையாடுகிறது?.. தாழ்த்தப்பட்டவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது? பின்னணியில் இருக்கும் அரசியல் ஆகியவற்றை இந்த படத்திலும் மாரி காட்டியிருப்பது டிரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி பைசன் வெளியாகவுள்ளது.

Published by
ராம் சுதன்