Bison Movie Review: பயோபிக்கே இல்ல... அது மாதிரி... பைசன் படம் எப்படி இருக்கு?

Bison Movie Review: துருவ் நடிப்பில் ஐந்தாவது படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று வெளிவந்து இருக்கும் திரைப்படம் பைசன் காளமாடன். இப்படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் பேசும் திரைவிமர்சனம் இங்கே!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், அமீர், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஹீரோ கிட்டனுக்கு வாழ்க்கையிலே ரொம்ப பிடித்த விஷயம் கபடி. தன்னுடைய கனவை அடைய அவருக்கு வரும் சாதி சிக்கல்களும் பிரச்னைகளுமே படத்தின் கதை.
மாரி செல்வராஜ் என்றாலே ஒரு சாதி அடையாளம் மொத்த படத்திலும் இருக்கும். அந்த வகையில் இந்த முறையும் அடக்குமுறை சாதி, மேல் சாதி என்ற கதைதான். அதன் காரணமாகவே மற்ற படங்களை போல இது மாரி செல்வராஜின் குட் லிஸ்ட்டில் சேரவே இல்லை.
ஆனால் கபடி வீரர் மானதி கணேசனின் வாழ்க்கை கதையை மையக்கருத்தாக எடுத்து இருப்பதால் எமோஷனலாக கனெக்ட் ஆக முடிகிறது. பைசன் என்ற டைட்டிலை மேலும் வலுவாக்கும் விதமாக கதையில் துருவ் விக்ரமுக்கு ஆக்ரோஷமான ஹீரோ அமைப்பை கொடுத்து இருக்கிறார்.
படத்தில் இடம் பெற்று இருந்த கபடி போட்டிகளின் காட்சிகள் சரியான விதத்தில் படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது. ஒளிப்பதிவாளர் எழில் அரசு ஹீரோ கிட்டனின் பிரச்னை நிறைந்த வாழ்க்கையை அப்படியே தன்னுடைய ஒளிப்பதிவில் நம்மிடம் கொண்டு வந்து இருக்கிறார்.
ஆனால் இப்படி ஒரு படத்துக்கு இசை எவ்வளவு வலுவாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா தோற்றுவிட்டார். பைசன் திரைப்படம் கிட்டத்தட்ட் 3 மணி நேரங்களை கொண்டு இருக்கிறது. முதல் பாதியை போல இரண்டாம் பாதியிலும் சில கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆகிறது.
ஆனால் முதல் பகுதியில் வந்த கேரக்டர்களை போல இரண்டாம் பகுதியில் வந்த கேரக்டர்கள் திருப்தியை தரவே இல்லை. இங்கு கிட்டன் வாழ்க்கை மட்டும் சொல்லப்படவில்லை. கிட்டனின் தந்தை மற்றும் மகன் இடையேயான பாசம். அந்த கேரக்டரில் நடித்த பசுபதி நம்மையும் கலங்க வைக்கிறார்.
கிட்டனுக்கு பயிற்சி தரும் ஆசிரியராக வரும் மதன்குமார் தட்சணாமூர்த்தி நிறைய இடங்களில் அப்ளாஸ் கொடுக்கும் வகையில் நடித்து இருக்கிறார். வாத்தியார் மாணவன் இடையேயான காட்சிகள் நமக்கும் எனர்ஜி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அமீர் மற்றும் லால் இருவரும் எப்போதும் போல தங்கள் காட்சிகளை அற்புதமாக நடித்து இருக்கின்றனர். அதிலும் ரஜிஷா விஜயன் மற்றும் அனுபமா பெரிய ஈர்ப்பை கொடுக்கவில்லை என்றாலும் தங்கள் கேரக்டருக்கு வேண்டிய நடிப்பை கொடுத்துள்ளனர். ஆனால் ரஜிஷாவின் டப்பிங் பல இடங்களில் சலிப்பை தருகிறது.
கருப்பு வெள்ளை காட்சிகளும், நிகழ்காலம் கடந்த காலம் என காட்சிகள் சரியான வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பைசன் கதையும் கிட்டனும் பல இடங்களில் சேரவே இல்லை என்பதே உண்மை. எப்படி பார்த்தாலும் பைசன் மாரி செல்வராஜின் வெற்றி லிஸ்ட்டில் கண்டிப்பாக இல்லை.