Dude Movie Review: அரைச்ச மாவு புளிச்சு போச்சு… மண்ணை கவ்விய பிரதீப் ரங்கநாதன்… டியூட் எப்படி இருக்கு?
Dude Movie Review: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே இளசுகளிடம் ஒரு நல்ல வரவேற்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்புடன் இன்று உலகம் முழுவதும் டியூட் திரைப்படம் வெளிவந்து இருக்கிறது.
அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் சாய் அபியங்கர் இசையமைப்பாளராக கோலிவுட்டில் எண்ட்ரியாகும் இப்படத்தில் பிரதீப் ஹீரோவாகி இருக்கிறார். ஏற்கனவே லவ் டுடே, ட்ராகன் படங்களின் வெற்றியை அவர் பெற்ற நிலையில் இப்படத்தையும் ஜென் சி கிட்ஸுக்காகவே கையில் எடுத்து இருக்கிறார்.
பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் நிகழ்ச்சிகளை செய்யும் ஒரு கம்பெனியை நடத்தி வரும் பிரதீப்பின் மாமன் மகளான மமிதா அவரை காதலிப்பதாக புரோபோஸ் செய்கிறார். ஆனால் பிரதீப் அவரை பிடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்து விடுகிறார்.
இதில் கோபமான மமிதா படிப்பிற்காக வெளியூர் சென்று விட அந்த நேரத்தில் பிரதீப்புக்கு காதல் வந்துவிட அதை தன்னுடைய மாமன் சரத்குமாரிடம் சொல்கிறார். அவரும் தனக்கு சம்மதம் எனக் கூறி உடனே திருமணத்தை ஏற்பாடு செய்ய ஆனால் மமிதா தான் இன்னொருவரை காதலிப்பதாக ஷாக் கொடுக்கிறார்.
கடைசியில் இவர்கள் திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் மீதி கதை. எப்போதும் போல நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். எங்குமே பிசிறு தட்டாமல் ரொம்ப சுலபமாக அவரிடம் நடிப்பு வருவதை பார்க்க முடிகிறது.

எல்லா வகை காட்சிகளிலும் ஒன்றி போகிறார். பிரதீப் ஹீரோயின்களுக்கு எப்போதுமே ஒரு வலுவான கதாபாத்திரம் இருக்கும். இங்கும் மமிதா பைஜுக்கு நல்ல ரோல் கொடுக்கப்பட்டு இருக்க அவரும் அதை உணர்ந்து நடித்து இருக்கிறார்.
இப்படத்தில் இன்னொரு ஹீரோ சரத்குமார். எப்போதும் போல தன் இடத்தை சரியாக கொடுத்துவிட்டார். சாய் அபியங்கர் ஆல்பம் சாங் மூலம் ஹிட் கொடுத்து வந்த நிலையில் முதல்முறையாக ஒரு கோலிவுட் படத்தின் இசையமைப்பாளராக மாறி இருக்கிறார்.
ஆனால் ஊரும் பிளட் பாடலை தவிர மற்ற எல்லா பாடலுமே சுமார் ரகம். அதிலும் பின்னணி இசை கொஞ்சமும் படத்திற்கு ஒத்துப்போகாமல் சலிப்பை தட்டுகிறது. ஆல்பம் சாங்கை ஹிட் கொடுத்து ஒரு பாடலுக்கு பிரபலம் ரேஞ்சுக்கு வந்துவிட்டார்.
இந்த மாதிரியான படங்களுக்கு கதையை விட திரைக்கதை தான் வலு சேர்க்கும். அந்த இடத்தில் சரியாக இயக்குனர் அசந்துவிட்டார். பல காட்சிகள் ஏன் என்றே தெரியவில்லை. ஹீரோவை தூக்கி பிடிக்க பல தேவையே இல்லாத காட்சிகள் படத்தில்.
பிரதீப் ரங்கநாதன் என்ற ஒற்றை பிம்பத்தை வைத்து எதை எடுத்தாலும் ஓடிவிடும் என்ற நம்பிக்கை சரியாக உடைந்து இருக்கிறது. டியூட் கொஞ்சம் சுமார்!..
