Jana Nayagan Review: மாஸ் மசாலா!.. ஃபுல் பில்டப்!.. ஜனநாயகன் பட முழு விமர்சனம்!...

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவான ஜன நாயகன் திரைப்படம் பற்றிய விமர்சனத்தை பார்ப்போம்!.
 
jananayagan review
ஜன நாயகன் விமர்சனம்

.வினோத் இயக்கத்தில் விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவான ஜன நாயகன் திரைப்படம் பற்றிய விமர்சனத்தை பார்ப்போம்!.

தெலுங்கில் பாலையா நடித்து ஹிட்டான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கிறது ஜன நாயகன். தனக்கென யாருமில்லாத தளபதி வெற்றி கொண்டான் (விஜய்) தனக்கு உதவிய போலீஸ் அதிகாரி கவுதம் மேனனின் மகளை தனது மகள் போல வளர்க்கிறார். மமிதாவின் அப்பா கவுதம் மேனனின் ஆசைப்படி மமிதாவை ராணுவத்தில் சேர்க்க வேண்டும், சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பால் உருவான பயத்தை போக்கவேண்டும் என்கிற இரண்டும்தான் விஜயின் லட்சியமாக இருக்கிறது. இதற்கு தடங்கலாக வில்லன் பாபி தியோல் வர என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.

தெலுங்கில் ஹிட்டான பகவந்த் கேசரி என்பதால் ஜன நாயகன் படத்திலும் மசாலாவுக்கு குறைவில்லை. தெலுங்கு படம் போலவே அதிரடி ஆக்சன் மற்றும் பில்டப் காட்சிகள் படம் முழுக்க நிரம்பியிருக்கிறது. பாலையாவை போலவே இந்த படத்திலும் விஜயை ‘தளபதி.. தளபதி’ என பில்டப் செய்துகொண்டே இருக்கிறார்கள். நோ லாஜிக்.. ஒன்லி மேஜிக் என சொல்வது போல எந்த காட்சியிலும் லாஜிக் இல்லை.. ஆனாலும் திரைக்கதையின் வேகத்தில் கட்டிப்போடுகிறார்கள். விஜய் ரசிகர்களுக்கு ஒரு பக்கா ஆக்சன் விருந்தாக ஜனநாயகன் வெளிவந்திருக்கிறது.

jana nayagan

படத்தின் பிரதானம் விஜய்தான். அவரை சுற்றிதான் முழு கதையும் சுழல்கிறது. ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது. தனது ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை புரிந்து அதற்கேற்ப ஒரு கதையை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு முழு விருந்து வைத்திருக்கிறார் விஜய். மமிதா பைஜூ அவருக்கான கதாபாத்திரத்தை புரிந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அதிரடி ஆக்‌ஷனும் செய்து அதகளம் செய்கிறார். பூஜா ஹெக்டேவும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை சரியாக செய்திருக்கிறார். வில்லனாக வரும் பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் தியேட்டரில் விஜயின் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸை கொடுத்திருக்கிறது. அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகளை அனல் அரசு அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டுமே படத்திற்கு பலம். விஜய் ரசிகர்களுக்கேற்ற படம் என்றாலும் பொதுவான ரசிகர்களையும் கவரும்படி திரைக்கதை அமைத்துள்ளார் ஹெச்.வினோத்.

அதேநேரம், தெலுங்கு படம் பார்க்கும் உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. படத்தின் நீளம் காரணமாக இடைவேளையின் போதே ஒரு படம் பார்த்த உணர்வு வந்துவிடுகிறது. வில்லன் பாபி தியோலுக்கு தேவையில்லாத ஒரு பிளாஷ்பேக் வைத்திருக்கிறார்கள். அதை எடிட்டிங்கில் வெட்டி தூக்கியிருந்தாலும் எதுவும் மாறியிருக்காது. அதேபோல், விஜய் என்ன வேலை செய்கிறார் என்பதில் குழப்பம்தான் வருகிறது. வன காவலரா, காவல் துறை அதிகாரியா என கேள்விகள் வருகிறது.

jana nayagan

இந்த படத்தில் அவர் கொன்ற ரவுடிகளின் எண்ணிக்கையை சரியாக சொல்லிவிட்டால் ஒரு கார் பரிசு என்று கூட அறிவிக்கலாம். அந்த அளவுக்கு வெட்டி சாய்க்கிறார். ரவுடிகள் எத்தனை பேரை வேண்டுமானாலும் ஹீரோ கொல்வார் என்கிற தெலுங்கு பட மசாலாவை அப்படியே ஜனநாயகனிலும் தூவியிருக்கிறார்கள். பாபி தியோலுக்கும் மேலே ஒரு வில்லன் இருப்பது போல காட்டுகிறார்கள். அவர் லேப்டாப்பில் மட்டுமே பேசுகிறார். அவர் யார் என கடைசி வரை காட்டவில்லை.

இந்தியாவில் வசிக்கும் மக்களின் கையில் துப்பாக்கியை கொடுத்து இந்து - முஸ்லீம் இடையே கலவரத்தை உண்டு பண்ணுவதுதான் வில்லனின் திட்டம் என்கிறார்கள். ரொம்ப பழைய பார்முலா. ஹெச்.வினோத் வேறு எதாவது யோசித்திருக்கலாம். குறைகள் இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் மசாலா விருந்தாகவும், திருவிழாவாகவும் ஜனநாயகன் படம் அமைந்திருக்கிறது. விஜயின் கடைசிப் படம் என்பதால் அவருக்கு பிரியா விடை கொடுக்கும் மனநிலையில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள்.

திரையில் விஜயை ரசிப்பர்களுக்கு ஜன நாயகன் பிடிக்கும்!...

 

From Around the web