கோலமாவு கோகிலாவ கொஞ்சம் மாத்துனா ரிவால்வர் ரீட்டா!.. டிரெய்லர் எப்படி இருக்கு?...
Revolver Rita: கீர்த்தி சுரேஷுக்கு கடந்த சில வருடங்களாகவே சூப்பர் ஹிட் படங்கள் அமையவில்லை. தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து பார்த்தார். ஆனால் படங்கள் ஓடவில்லை. அதுவும் திருமணத்திற்கு பின் அவர் திரைப்படங்களில் நடிக்கிறாரா இல்லையா என்பதை பலருக்கும் தெரியவில்லை.
ஆனாலும் சில படங்களில் அவர் நடித்து வந்தார். அதில் ஒன்றுதான் ரிவால்வர் ரீட்டா. இந்த படத்தை கே சந்துரு என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியிருக்கிறது. தெலுங்கில் ஓட வேண்டும் என்பதற்காக நடிகர் சுனிலை வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார்கள், மேலும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள அஜய் கோஷ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இதுபோக ரெடின் கிங்ஸ்லி, ராதிகா, சூப்பர் சுப்பராயன், சென்ராயன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. வில்லன் சுனிலின் அப்பா சூப்பர் சுப்பராயன் கீர்த்தி சுரேஷின் வீட்டில் இறந்து கிடக்கிறார். எனவே வில்லனுக்கு தெரியாமல் அவரை அப்புறப்படுத்தும் வேலையில் கீர்த்தி சுரேஷ், அவரின் அம்மா ராதிகா மற்றும் தங்கை ஆகியோர்கள் இறங்குகிறார்கள். ஒருபக்கம் தன் அப்பாவை கொன்றது யார் என சுனில் தேடி வருகிறார். கீர்த்தி சுரேஷ் அதை எப்படி சமாளித்தார்? வில்லனுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் இடையே இருக்கும் மோதல் என்ன என்பது பற்றி படம் பேசுகிறது.

படத்தின் டிரைலரை பார்க்கும்போது பல காட்சிகளிலும் நமக்கு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அந்த படத்தில் நயன்தாரா, அவருடைய அம்மா சரண்யா. மற்றும் தங்கை மூவரும் சேர்ந்து ஒரு வேனில் கஞ்சாவை கடத்துவார்கள். அதுபோல இந்த படத்தில் காரில் வில்லனின் அப்பாவை இவர்கள் மூவரும் கடத்துகிறார்கள். கோலமாவு கோகிலா படத்தில் வந்த ரெடின் கிங்ஸ்லி இந்த படத்தில் இருக்கிறார்.
எனவே கோலமாவு கோகிலா படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்த படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வருகிற 28ஆம் தேதி படம் தியேட்டரில் வெளியாகவுள்ளது.கோலமாவு கோகிலா கதையை கொஞ்சம் மாற்றி ரிவால்வர் ரீட்டா என எடுத்திருக்கிறார்கள் என்கிற விமர்சனத்தை கடந்து இப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.
