சூர்யாவின் சீன்: விநியோகஸ்தர் சொன்ன முதல் விமர்சனம்
கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தொடர் வெற்றிக்கு பின் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் சீன் . மலையாளத்தில் ரோமாஞ்சம் , ஆவேஷம் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற ஜித்து மாதவன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். அதிரடி, நகைச்சுவை மற்றும் க்ரைம் திரில்லர் கலந்து உருவாகியுள்ள சீன் திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி வெளியாக உள்ளது.
சீன் படத்தில் சூர்யா டிஎஸ்பி இன்பராஜ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு முடிக்காமல் விட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு இன்பராஜ் தள்ளப்படுகிறார். அந்த வழக்கை ஒரு வித்தியாசமான போலீஸ் குழுவுடன் சேர்ந்து அவர் எப்படி விசாரிக்கிறார் என்பதையே மையமாகக் கொண்டு இந்த கதை அமைக்கபட்டுள்ளது. குறிப்பாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான கிளிம்ஸ் வீடியோவிலும் சூர்யாவின் கதாபாத்திரம் வழக்கமான சீரியஸான போலீஸ் அதிகாரியாக இல்லாமல், நகைச்சுவை கலந்த வித்தியாசமான பாணியில் காட்டப்பட்டிருந்தது. அதேசமயம் கலைந்த முடி, தாடியுடன் சூர்யாவின் மற்றொரு தோற்றமும் இடம்பெற்றிருந்தது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்தது.
சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்த்ராஜ், லால், ஜான் விஜய், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா தமிழ் திரைப்படத்தில் நடிப்பதும் படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. பிரேமலு மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான நஸ்லெனுக்கு இது முக்கியமான தமிழ் படமாக அமைந்துள்ளது. ஆவேஷம் படத்தில் ஜித்து மாதவனுடன் பணியாற்றிய சுஷின் ஷியாம் சீன் படத்திற்கும் இசையமைத்துள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ழகரம் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில் சீன் படம் குறித்த முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. பிரபல விநியோகஸ்தர் சக்தி வேலன் சீன் படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், சூர்யாவின் பங்களிப்பு இந்த ஆண்டு ரூ. 1000 கோடியை தொடும். க்ரைம் திரில்லர் காமெடியாக உருவாகியுள்ள இந்த படம் வெறித்தனமான இடைவேளை மற்றும் 2ம் பாதி 6 மாஸ் காட்சிகளுடனும் திரையரங்கை அதிர வைக்கும் என்று கூறியுள்ளார்.
நேற்று வெளியான படத்தின் டிரைலரை காண்கையில் இப்படம் சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்றே தெரிகிறது.
