ரீவைண்ட்-வில்லங்கமான கதையை நாகரீகமாக சொன்ன மனைவி ரெடி

தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் போல ஒரு வித்தியாசமான இயக்குனரை பார்ப்பது அரிது. இயக்குனர் பாக்யராஜிடம் சினிமா பாடம் படித்த பாண்டியராஜன் முதல் படமான கன்னிராசி இயக்கும்போது அவருக்கு வயது 21.

manaivi-ready-1

இவரின் ஆண்பாவம் முதற்கொண்டு அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்கள் எல்லாம் வெற்றிவாகை சூடிய படங்களேயாகும்.

manaivi-ready-pandiyarajan-chinthamani

அப்படியாக பாண்டியராஜன் இயக்கியதில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான படம்தான் மனைவி ரெடி.

1987ம் ஆண்டு ஆங்கில வருடப்பிறப்பான ஜனவரி 1ம் தேதி இப்படம் வெளியானது. பாண்டியராஜன் தனது தந்தை ரத்னம் பெயரில் புரொடக்சன் கம்பெனி ஆரம்பித்து தனது ரத்னம் ஆர்ட் புரொடக்சன் என்ற பெயரில் தயாரித்து இயக்கி வெளியிட்ட படம்தான் மனைவி ரெடி.

இப்படத்தில் பாண்டியராஜன், சிந்தாமணி, டணால் தங்கவேலு, ஆர்.எஸ் மனோகர், மனோரமா, மனோரமாவின் மகன் பூபதி என பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்திருந்தது.

இப்படத்தில் பாண்டியராஜன் அந்தக்கால நடிகர்களான மனோகர், தங்கவேலு, மனோரமா போன்றவர்களுக்கு நடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.
பாண்டியராஜனின் வழக்கமான குறும்புத்தனங்களுடன் வந்த படம்தான் இது. இருப்பினும் இது ஒரு வித்தியாசமான கதைக்களம்.

prathap-manorama

தன் பையனை வயலின் இசையில் பெரிய ஆளாக்கி விட வேண்டும் என்று துடிக்கும் ஆர்.எஸ் மனோகர், பையனாக பாண்டியராஜன் பள்ளிப்படிப்பையே தாண்டாமல் ப்ளஸ் டூ படித்து வருகிறார். அவர் தந்தையின் நண்பரும் பாண்டியராஜனின் வாத்தியாராக வரும் டணால் தங்கவேலு மனோகருக்கு ஆதரவாகவும் பாண்டியராஜனுக்கு ஆதரவாகவும் பக்கத்து வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களான பாண்டியராஜனும் அவரது நண்பர்களும் தன் நண்பர் வீட்டு திருமணத்துக்கு செல்கின்றனர். அங்கு கதாநாயகி சிந்தாமணி மணப்பெண்ணாக வந்து உட்கார தாலி கட்டும் மாப்பிள்ளை வராமல் போகிறார். இதனால் வேறு யாராவது வாழ்க்கை கொடுத்து அந்த திருமணத்தை தடையில்லாமல் நடத்துவார்களா என மணமகள் வீட்டார் எதிர்பார்க்கையில் பள்ளிப்படிப்பை முடிக்காத பாண்டியராஜன் இரக்கப்பட்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வார்.

manaivi-ready2
திருமணம் செய்த பாண்டியராஜன் தன் வீட்டுக்கு பெண்ணை அழைத்து வருவார். தன் மகன் வயலின் இசை அரங்கேற்றம் செய்த பிறகுதான் திருமணம் என்ற கொள்கையில் உறுதியாக வாழ்ந்து வரும் ஆர்.எஸ் மனோகருக்கு , திருமணக்கோலத்தில் பாண்டியராஜனை பார்த்ததும் அதிர்ச்சி. நீ வயலின் கற்று என் தந்தையை போல் பெரிய ஆளாக வந்து அரங்கேற்றம் செய்யும் வரை உன் மனைவியுடன் தாம்பத்ய உறவில் ஈடுபடக்கூடாது. அதன் பின் தான் உனக்கு முதலிரவு என்று தந்தை சொல்லிவிட. கல்யாணம் செய்து கொண்ட கணவன் மனைவி இருவரும் ஏங்கி தவிக்கின்றனர். ஒரே வீட்டில் இருந்தும் தங்களால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியவில்லை என ஏக்கம் கொள்கின்றனர்.

ஒரு கட்டத்தில் தனது மாமனார் ஆர்.எஸ் மனோகரின் கொள்கையை மதித்து பாண்டியராஜனிடம் நெருங்கவே மறுக்கிறார் சிந்தாமணி.

இதனால் கோபமடையும் பாண்டியராஜன் விபச்சார விடுதிக்கு செல்கிறார். அங்கு போலீஸ் ரெய்டு வந்து துரத்த தலைதெறிக்க ஓட்டமெடுக்கும் பாண்டியராஜன் ரயில்வே லைனில் ஏறிக்குதிக்கிறேன் என கம்பி குத்தி விடுகிறது. எந்த தாம்பத்ய சுகத்திற்காக அவர் ஏங்கினாரோ அந்த இடத்திலேயே குத்தி விடுகிறது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று எப்படி சக்ஸஸ் செய்து வயலின் அரங்கேற்றத்தை நிகழ்த்தி மனைவியுடன் இனிமையான இல்லற வாழ்க்கையை பாண்டியராஜன் தொடர்கிறார் என்பதே இப்படத்தின் கதை.

படத்தின் முதல் ஹீரோ இளையராஜா. முதலில் டைட்டில் போடும்போதே பின்னணி இசையில் கலகலக்க வைப்பார். படம் முழுவதும் அழகான பின்னணி இசையில் கலக்கி எடுத்திருப்பார்.

குறிப்பாக ஸ்டைலாக உடையணிந்து ஆங்கிலப்பட நாயகன் போல விபச்சார விடுதி சென்று அங்கு பெண்களை பாண்டியராஜன் செலக்ட் செய்யும் காட்சியில் வேற லெவல் பின்னணி இசையில் இளையராஜா கலக்கலாக இசைத்திருப்பார்.

அது போல பாண்டியராஜன் சிந்தாமணி வரும் பல காட்சிகளில் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையில் இளையராஜா கலக்கி இருப்பார்.

பல்லவன் ஓடுற, சாண் பிள்ளையானாலும் , உடம்பு இப்போ தேறி போச்சி பாடல்களில் இளையராஜா கலக்கி இருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும். அதே போல் உன்ன விட்டா யாருமில்ல சாமி என்ற பாடலில் இளையராஜா உருகி இருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தின் டைட்டிலில் ஆரம்பித்து படத்தின் க்ளைமாக்ஸ் வரை ஒரு நிமிடம் கூட படம் ஃபோரடிக்காத வகையில் தனது குருநாதர் பாக்யராஜின் கொள்கையை கடைபிடித்து அழகான திரைக்கதையை அமைத்திருப்பார் பாண்டியராஜன்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாண்டியராஜன் என டைட்டில் போடும் ஆரம்ப காட்சியிலேயே பாண்டியராஜன் சிறப்பாக வயலின் வாசிப்பது போல காட்சியமைத்து இறுதியில் அது வானொலியில் இருந்து வரும் வயலின் சத்தம் என அல்டிமேட் சீனாக காட்சியை வைத்திருப்பார் பாண்டியராஜன்.

இப்படி பாண்டியராஜனின் முத்திரைகள் படம் முழுவதும் வந்துகொண்டே இருக்கும்.
தனது அப்பாவிடம் அடிக்கடி போட்டு விடும் பக்கத்து வீட்டு வாத்தியார் தங்கவேலுவை பழிவாங்குகிறேன் என வெடிமருந்து கலந்த சிகரெட்டை அவருக்கு கொடுத்து புகைக்க சொல்லும் பாண்டியராஜனின் சேட்டைகள் எல்லாம் கலகலக்க வைப்பவை.
படத்தில் கலகலக்க வைத்த மற்றொருவர் மனோரமா. திருமண வீட்டில் வந்த வாழ்த்து தந்தியை பார்த்து விட்டு கதறி அழுவார் மனோராமா அந்த காட்சிகளில் நல்ல காமெடியாக இருக்கும். தந்தி வந்தா சாவு வந்தாதான் வரும்னு தெரியாத அளவுக்கு நான் என்ன புண்ணாக்கா என மனோரமா கேட்க புண்ணாக்கேதான் என பாண்டியராஜன் தனது பாணியில் பதில் சொல்ல செம ரகளையான காமெடியாக இருக்கும்.

டாக்டராக வரும் பிரதாப்போத்தன் ரத்தம் வேண்டும் என்று சொல்ல ரத்தப்பொறியல் செய்து கொண்டு வந்து, டாக்டர் பிரதாப்போத்தனை, மனோரமா டென்சன் செய்யும் காட்சிகள் செம ரகளையாக இருக்கும். மனோரமாவின் மகன் பூபதியும் சில நிமிடங்கள் நடித்திருப்பார். சிறிது நேரம் டாக்டராக சில காட்சிகளில் வந்தாலும் பிரதாப்போத்தன் லூஸ் டாக்டர் போல கலகலக்க வைத்திருப்பார்.

சிந்தாமணி இப்பட அறிமுக நாயகியாக வந்தாலும் கலக்கி இருப்பார். மிக அழகான நாயகி ஆனால் அதிகம் சினிமாவில் பெரிய ரவுண்ட் வரவில்லை.

ஒரு மனிதனுக்கு இல்லறம் எனும் தாம்பத்ய வாழ்வு மிக முக்கியம் அது தடைபட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதையும் சிறு வயதிலேயே திருமணம் முடிந்தால் குடும்ப ரீதியாக என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது மிக நாகரீகமாக சொல்லி இருந்தார் இப்பட இயக்குனர் பாண்டியராஜன்.

இப்போதும் எப்போ டிவியில் பார்த்தாலும் யூ டியூபில் பார்த்தாலும் கலகலக்க வைக்கும் படமிது.

 

Related Articles

Next Story