நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பல மொழியில் இருந்தும் நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஏற்கனவே ஜெயிலர் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
ஜெயிலர் 2 ரஜினியின் 172வது திரைப்படமாகும். ஒருபக்கம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினி அடுத்து நடிக்கவுள்ள படத்தை சுந்தர்.சி இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் சுந்தர்.சி அந்த படத்திலிருந்து விலகவே பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கதையை ரஜினி டிக் அடித்திருப்பதாக செய்திகள் வெளியானது.
மேலும் அவர்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் அப்படி எந்த செய்தியும் ரஜினியின் பிறந்தநாளன்று வெளியாகவில்லை.
எனவே ரஜினியின் 173 வது படத்தை ராம்குமார்தான் இயக்குகிறாரா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. இந்நிலையில் ரஜினி தொடர்ந்து பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்
. அப்படி ரஜினி கதை கேட்ட இயக்குனர்களில் ஆர்.ஜே.பாலாஜியும் ஒருவர். இவர் ஏற்கனவே மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். சூர்யாவை வைத்து கருப்பு என்கிற திரைப்படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் ரஜினியிடம் கதை சொல்ல சென்றபோது கதையை அவர் பாதி சொல்லியதுமே இது தனக்கு செட் ஆகாது என ரஜினிக்கு புரிந்து விட்டதாம். எனவே வேறு ஏதேதோ கதையை பேசி ‘அப்புறம் பார்க்கலாம் தம்பி’ என சொல்லி அனுப்பி விட்டாராம்.
பிரச்சனை என்னவெனில் ரஜினிக்கு கதை சொல்ல போகிறோம் என்பதை விட ரஜினிக்காக ஒரு கதையை சொல்லப்போகிறோம் என்பதைதான் ரஜினியிடம் கதை சொல்லப் போகிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த கதை அவருக்காகவே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவருக்கு பொருந்தாத ஒரு கதையை சொன்னால் அவர் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
