Call Me Sir… ரோலக்ஸ் பாணியில் மரியாதையோடு கூப்பிட சொன்ன நடிகர்… கண்டுக்காமல் போன ஆர்.ஜே.பாலாஜி
தமிழ் சினிமாவில் தற்போது இளைஞர்களை கவர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. சமீப காலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் மக்களை கவர்ந்து வருகிறது. இவரின் கிரிக்கெட் கம்மென்ட்ரிக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதற்கும் அதிகமாக இவரது திரைப்படங்களுக்கு தற்போது ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.
ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “எல்.கே.ஜி”, “மூக்குத்தி அம்மன்”, “வீட்ல விசேஷம்” ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த வாரம் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த “ரன் பேபி ரன்” என்ற திரைப்படம் கூட குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றிருந்தது.
ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பு பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “தீயா வேலை செய்யனும் குமாரு” திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்திருந்தார். இதில் ஹீரோவாக சித்தார்த் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, சுந்தர்.சி, சித்தார்த் ஆகியோர் எப்போதும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவார்களாம். மேலும் சித்தார்த்தும் ஆர்.ஜே.பாலாஜியும் வாடா போடா என பேசிக்கொள்வார்களாம்.
ஒரு நாள் அத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஒரு நடிகர் ஆர்.ஜே.பாலாஜியை தனியாக அழைத்து “டைரக்டர் சார் கூட உட்கார்ந்து சாப்புடுறீங்க. அவங்க கூப்பிட்டாலும் நாம போகக்கூடாது. அதே மாதிரி சித்தார்த்தை பேர் சொல்லி கூப்பிடாதீங்க, சார்ன்னு கூப்பிடுங்க” என கூறினாராம்.
அதன் பின் ஒரு நாள் இந்த விஷயத்தை சுந்தர்.சியிடம் கூறினாராம் பாலாஜி. அதற்கு அவர் “இதெல்லாம் ரொம்ப பழைய வழக்கம். சாப்பிட கூப்பிட்டா யாரும் வந்து உட்கார்ந்து சாப்புட மாட்டாங்க. நான் யாரையும் அப்படி நினைச்சிக்கிறது இல்லை, அவங்களா நினைச்சிக்கிறாங்க” என கூறினாராம்.