மனதை மயக்கும் ரம்மியமான பாடல்களால் கவரப்பட்ட கிராமியப் படம் இதுதான்..!
பரசங்கட கெண்டதிம்மா என்ற இந்த நாவல் கன்னடத்தில் மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீஅலனஹல்லி எழுதியது. படிச்ச பட்டணத்துப்பெண் கிராமத்தில் உள்ள வியாபாரியைத் திருமணம் செய்கிறாள்.
அதன்பின்னர் எழும் பிரச்சனைகள், சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை. திருமணத்திற்குப் பிறகும் காதல் வெளியில் மலர்வதை இந்நாவல் தோலுரித்துக் காட்டுகிறது.
1978ல் கன்னடத்தில்; இந்நாவல் படமாக உருவானது. இதே படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட சூப்பர்ஹிட் படம் தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. சிவகுமார், தீபா நடித்த இந்தப் படம் அப்போது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
படத்தின் கதை அம்சமானது சுதந்திர காலகட்டத்திற்கு முந்தையது. அப்போது மலையடி கிராமம் ஒன்றில் நடக்கும் கதை இது.
இசைஞானியின் கைவண்ணத்தில் பாடல்கள் அனைத்தும் மனதை வருடும் ஒலிக்கீற்றுகளாய் இதயத்தைத் துளைத்தன.
வாணிஜெயராமின் பாடல் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் என்ற இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் நம் மனதை மயக்கத்தான் செய்யும். அவ்வளவு ரசனையானது.
ரவிக்கை, உள்பாவாடை என பட்டணத்தின் உடைகளை அணிகிறாள் நாயகி தீபா. இதனால் ஊரார் இது நாகரீக மாற்றம் என்று அவளுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து ஆங்கில அதிகாரியின் உதவியாளராக இருக்கும் சிவச்சந்திரன் அணியும் உடை, பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளிலும் அவனது பழக்க வழக்கங்களாலும் தீபா அவன் மேல் காதல் கொள்கிறாள்.
அவனுடன் பைக்கில் சென்று புதிய துணையை நாடுகிறது அவளது மனம். இப்போது ஒரு இசை வருகிறது. அதுதான் இந்த மனதை வருடும் பாடல்.
தவறு செய்யத் தயங்குகிறாள் பெண். அவளின் மனமோ ஊசலாடுகிறது. இதை இயற்கையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் நமக்கு தெரியும். ஆனால் இந்தப் பாடலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இசையை இயற்கையே ஓலமிடும் வகையில் வடிவமைத்திருப்பார் இளையராஜா.
பாடலைக் கொஞ்சம் உற்றுக் கேட்டால் நமக்கு இது புலப்படும். இப்படி ஒரு பாடல் தான் நம் மனது எதிரபார்த்துக் காத்துக் கொண்டிருந்தது உங்களுக்கேத் தெரிய வரும். அதனால் தானோ இசைஞானியை ராகதேவன் என்றும் அழைக்கின்றனர் என்ற ஆச்சரியம் மேலோங்கும்.
சாரங்கி, புல்லாங்குழல், தபேலா என இசைக்கருவிகள் இந்தப் பாடலுக்குத் தங்கள் இஷ்டம்போல ரம்மியமாக தாளம் போடுகின்றன.
வயலின், புல்லாங்குழல், சிதார் இசைக்கருவிகள் போதையிலே மனம் பொங்கி நிற்க என்ற வரிகளில் பதமாக தாளம் போடும்.
மலையோரக் கிராமத்திற்கே உரிய வியாபாரி எப்படி இருப்பானோ அப்படியே தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார் சிவகுமார். வியாபாரத்திற்குப் பின் தன் களைப்பு நீங்க அவர் பாடும் வெத்தல வெத்தல வெத்தலயோ பாடலில் தாளம் சக்கைபோடு போடுகிறது.
பாடலில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப பின்னணி பாடியிருப்பவர் மலேசியாவாசுதேவன். அப்பாவித்தனம் நிறைந்த குரல் இவருக்கு பிளஸ் பாயிண்ட். அதே போல மாமே ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்...பாடலுக்கு எஸ்.பி.பி.யும், எஸ்.பி.சைலஜாவும் பாடி அசத்தியிருந்தனர்.
ஒருமுறை தனது மனைவியைப் பற்றிய அவதூறுகளைக் கேட்டு நொந்து போயிருக்கும் செம்பட்டையிடம் ஊர் பெரியவரின் மகன் பாட்டுப் பாடச் சொல்வான். அப்போது செம்பட்டையான சிவகுமார் பாடும் பாடல் தான் உச்சி வகுந்தெடுத்துப் பிச்சிப்பூ வச்சக்கிளி பாடல். செம கிளாஸான பாடல். ஆல் கிளாஸிலும் அடிச்சித் தூக்கிப் பட்டையைக் கிளப்பியது இந்தப் பாடல்.
உடுக்கை இசையின் பின்னணியில் எஸ்பிபியின் ஹம்மிங் பாடல். அதற்கேற்ற ராஜாவின் இசை மனதை மயக்குகிறது.