ஐயோ பாவம்!...தள்ளிப்போன ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் - என்ன காரணம் தெரியுமா?...
பாகுபலிக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலியை போலவே அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை வருகிற 7ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. மேலும், ஆந்திராவில், 150 தியேட்டர்கள் பராமரிப்பு பணி சரியில்லை எனக்கூறி அந்த மாநில அரசு மூடிவிட்டதோடு, தியேட்டர் டிக்கெட் விலையையும் குறைத்துவிட்டது. மேலும், தமிழகத்திலும் 10ம் தேதி வரை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் வெளியிடுவோம் என அப்படக்குழு தெரிவித்துள்ளது. ஜனவரி 10ம் தேதிக்கு பின் வெளியாகும், ஜனவரி 14ம் தேதி வெளியாகும், 2020 கோடை விடுமுறையில் வெளியாகும் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், படக்குழு எதையும் உறுதி செய்யவில்லை.
இப்படத்திற்காக கடுமையான புரமோஷனை ஆர்.அர்.ஆர். படக்குழு செய்தது. சென்னை, மும்பை, பெங்களூர், கேரளா, ஆந்திரா என எல்லா இடங்களுக்கும் ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நேரில் சென்று புரமோஷன் செய்தனர். நிறைய ஊடகங்களில் பேட்டி கொடுத்தனர். தற்போது வீணாக போய்விடுமோ என்கிற கலக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடமே இப்படம் வெளியாக திட்டமிடப்பட்டது. கொரோனா ஊரடங்கள் ரிலீஸ் தள்ளி சென்றது. தற்போது மீண்டும் ரிலீஸ் தள்ளி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.