வாலி ஹிந்தி ரீமேக்: மீண்டும் வெடிக்கும் பிரச்சனை!! போனி கபூருடன் மோதும் எஸ்.ஜே.சூர்யா!!
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் தல அஜித் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 1999ல் வெளியான படம் 'வாலி'. இப்படத்தின்மூலம்தான் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமானார். இதில் நாயகியாக சிம்ரன் நடித்திருந்தார். இரண்டாம் நாயகியாக நடித்திருந்த ஜோதிகாவுக்கு இதுதான் முதல்படம்.
இப்படம் வெளியானபோது மாபெரும் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் வென்று அசத்தியது. அன்றைய காலத்தில் அஜித்துக்கு பெரிய திருப்புமுனையைக் கொடுத்தப்படமாக இது அமைந்தது.
இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வாங்கியிருந்தார். ஆனால், தன்னுடைய அனுமதியின்றி இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யக்கூடாது என எஸ்.ஜே.சூர்யா முன்பே வழக்கு தொடர்ந்திருந்தார். இதை எதிர்த்து போனி கபூர் மேல்முறையீடு செய்ததில் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.
தற்போது இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேளையில் போனி கபூர் இறங்கியுள்ளதால், உச்சநீதி மன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாலி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தால் அதில் ஹீரோவாக அஜித் நடிக்க வேண்டும் இல்லை என்றால் அதில் தான்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.