12 நாட்களில் எடுக்கப்பட்ட படம்… ரிலீஸ் ஆனதும் நொந்துப்போன எஸ்.ஏ.சி… ஏன் தெரியுமா?
விஜய்யின் தந்தையும் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் திகழ்ந்து வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடங்களாக பயணித்துக்கொண்டிருக்கும் இயக்குனராக திகழ்கிறார் எஸ்.ஏ.சி. கடந்த 3 ஆம் தேதி கூட எஸ்.ஏ.சி இயக்கிய “நான் கடவுள் இல்லை” என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த வயதிலும் மிகத் தீவிரமாக சினிமாத் துறையில் இயங்கிக்கொண்டிருப்பவர் எஸ்.ஏ.சி.
எஸ்.ஏ.சி தொடக்கத்தில் டி.என்.பாலு, கே.எஸ்.பிரகாஷ் ராவ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆதலால் சிவாஜி கணேசனுக்கும் எஸ்.ஏ.சிக்கும் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டது. இந்த நட்பின் காரணமாகத்தான் “ஒன்ஸ் மோர்” திரைப்படத்தில் சிவாஜி கணேசன் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.
இவ்வாறு பலரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஏ.சி, தனியாக படம் இயக்கலாம் என முடிவு செய்தார். அதன்படி தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரித்து அத்திரைப்படத்தையும் இயக்கினார். அத்திரைப்படத்தின் பெயர் “அவள் ஒரு பச்சைக் குழந்தை”. இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளியானது.
“அவள் ஒரு பச்சைக் குழந்தை” திரைப்படம் 12 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது. ஆனால் அத்திரைப்படம் வெளிவந்த பிறகு 12 நாட்கள் கூட திரையரங்குகளில் ஓடவில்லையாம். அந்தளவுக்கு படுதோல்வியடைந்ததாம் அத்திரைப்படம்.
இவ்வாறு தனது முதல் திரைப்படத்திலேயே தோல்வியை கண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. எனினும் எஸ்.ஏ.சி விஜயகாந்த்தை வைத்து அவர் இயக்கிய “சட்டம் ஒரு இருட்டறை” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஏ.சி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எஸ்.ஏ.சியை கண்டபடி திட்டிய உதவி இயக்குனர்… இந்த சாதாரண விஷயத்துக்கா இப்படி??