யோகா ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது! - யுனெஸ்கோவில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் சத்குரு சிறப்புரை

by சிவா |
isha
X

9-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ‘விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் சத்குரு அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “யோகா பாரத தேசத்தில் தோன்றியது என்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம். ஆனால், அனைவரும் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான தேசப்பற்று கொண்ட சிலர் என்னுடைய இந்த கருத்துடன் முரண்படுவார்கள் என எனக்கு தெரியும். இருந்தாலும் சொல்கிறேன், யோகா என்பது நம் பாரத தேசத்திற்கு சொந்தமானது இல்லை. அது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது.

https://www.instagram.com/p/Ctwp28-Pgl0/

ஏதோவொன்றை நாம் புதிதாக கண்டுப்பிடித்தால் அதை ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவிற்கு சொந்தம் என கூறலாம். ஆனால், ஏற்கனவே இருக்கும் உண்மையை கண்டு உணர்ந்தால் அது உங்களுக்கோ அல்லது எனக்கோ சொந்தம் இல்லை. முழுமை அடைய விரும்பும் ஒவ்வொரு மனிதனிக்கும் அந்த உரிமை உள்ளது.

சர்வதேச யோகா தினம் என்பது ஒரு கொண்டாட்ட தினம் கிடையாது. இது உறுதி ஏற்கும் தினம். நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறந்த நிலையில் இருந்து, இந்த உலகிற்கு சிறந்த பங்களிப்பை அளிக்க உறுதி ஏற்கும் தினமாகும்.” என்றார்.

நிகழ்ச்சியில் சத்குருவின் சிறப்புரையை தொடர்ந்து யுனெஸ்கோவின் அமைதிக்கான கலைஞர் (Artist for Peace) டாக்டர் குய்லா க்ளாரா கெஸாஸ் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடினார்.

மனித குலத்திற்கு யோகாவின் தேவை தொடர்பான அவரின் கேள்விக்கு சத்குரு பதில் அளிக்கையில், “வசதியான தேசமான அமெரிக்காவில் ஒவ்வொரு இரண்டு அமெரிக்கர்களில் ஒருவர் தனிமையில் வாடுவதாக மருத்துவ துறையினர் கூறுகின்றனர். உலகின் மக்கள் தொகை 8.4 பில்லியனாக இருக்கும் சூழலில் அவர்கள் தனிமையில் வாடுவது எந்த வகையில் சரியாக இருக்கும்?

isha

இதற்கு காரணம், ஒவ்வொரும் தங்களை சுற்றி ஒரு தனித்துவமான சுவரை எழுப்பி கொள்கிறார்கள். தங்களின் சுய பாதுகாப்பிற்கு என உருவாக்கிய அந்த சுவரை விட்டு அவர்களால் வெளி வர் முடியாமல் சிக்கி போனதால் தனிமையில் தவிக்கிறார்கள். இன்று நீங்கள் சுய பாதுகாப்பிற்காக என உருவாக்கும் இதுப்போன்ற சுவர்கள் நாளை உங்களான சுய சிறையாக மாறிவிடும்.

தனிமையில் வாடுவது மன நோயின் முதல் அறிகுறி. அதனால், யோகாவின் தேவை இப்போது மிக மிக அவசியமாகிறது. யோகா என்றால் சங்கமம். அங்கு தனிமை என்ற பேச்சிற்கே இடமில்லை” என்றார்.

மேலும் “மனிதர்கள் சந்திக்கும் அனைத்து பாதிப்புகளும் உடல் அல்லது மனம் ஆகிய இரண்டின் மூலம் மட்டுமே வருகின்றன. எனவே உங்களுக்கும் இவை இரண்டிற்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளியை உருவாக்கி கொள்ளுங்கள். அப்படி செய்தால், பாதிப்பு என்ற ஒரு விஷயமே உங்கள் வாழ்வில் இருக்காது” என்றார்.

இதை அனுபவப்பூர்வமாக வாழ்வில் கொண்டு வரும் விதமாக, ‘ஈஷா க்ரியா’ என்ற எளிமையான யோக பயிற்சியை சத்குரு அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு பரிமாறினார்.

யுனெஸ்கோவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் ஆட்ரி ஆசுலே, நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதர் திரு. விஷால் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். மேலும், பாலஸ்தீன், செக் குடியரசு, மொரோக்கோ, பெரு, ரோமானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story