இந்த விஷயத்தில் கமலுக்கு இணையாக  இந்தியாவிலேயே ஆள் கிடையாது....! பிரபல தயாரிப்பாளர் சொல்கிறார்

சகலகலாவல்லவன் படம் 1982ல் வெளியானது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல், அம்பிகா, சில்க், வி.கே.ராமசாமி நடித்த இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. இந்தப்படம் குறித்த சில சுவாரசியமான தகவல்களை ஏவிஎம் பட அதிபர் சரவணன் பகிர்கிறார் பாருங்கள்.

சகலகலாவல்லவன் என்ற படத்தை நாங்கள் கதைக்காக வைக்கவில்லை. திறமையில் கமல் ஒரு சகலகலாவல்லவன் என்பதால் வைத்தோம். பஞ்சு அருணாசலம்தான் இந்தப் பெயரை வைக்கலாம் என்று யோசனை சொன்னார்.

முதலில் பெயர் எங்களுக்குக் கரடுமுரடாக இருக்கிறதே...உச்சரிப்பார்களா என்று யோசித்தோம். பின்னர் விநியோகஸ்தர்களிடம் கலந்து ஆலோசித்தேன். அதன்பின் அனைவரும் ஓகே சொல்ல அதே பெயர் வைக்கப்பட்டது.

Sakalakalavallavan

நடிப்பு, பாட்டு, நடனம், சண்டை என எல்லாப்பிரிவுகளிலும் கமல் தன்னை நிரூபித்துக் காட்டிய படம் இது. நடிகர் திலகம் சிவாஜிக்குப் பின் இவர் தான். இன்றைய தேதியில் கமலுக்கு இணையான ஓர் ஆர்டிஸ்ட் கம் டெக்னீஷியன் இந்தியாவிலேயே கிடையாது.

இந்தப்படத்தின் நடனக்காட்சிகளும், சண்டைக்காட்சி களும் தமிழ்த்திரை உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையைத் தந்தது. இடைவேளைக்குப் பிறகு படத்தில் சரியான அளவில் எந்த ஒரு அயிட்டமும் இல்லை. அயிட்டம்னா அது மக்களைக் கவரும் பாப்புலரான காட்சி. அதற்காக ஒரு சூப்பரான சண்டைக்காட்சியை அமைத்தோம்.

ஒரு வேனில் தொங்கியபடி ஊருக்குள் அந்த வேன் போய்க்கொண்டே இருக்க ஹீரோ சண்டைபோடுவது போல எடுத்தோம். வில்லன் கும்பலுடன் ஹீரோ எப்படி சண்டைப் போடப் போகிறார் என யோசித்தோம். பூ வாங்கி வர ஹீரோ இறங்கிப் போறான்.

வில்லன் கும்பல் கதாநாயகியைக் கடத்துகிறது. கமல் அந்தக்காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்தார். வேனில் தொங்கிக்கொண்டே இயல்பாக சண்டை போட்டு சுற்றி வந்தது அற்புதம். அதே போல குச்சி சண்டை செம மாஸாக இருந்தது. இதற்கு நல்லி செட்டியாரின் மகன்கள் தான் ஒரு படம் கொடுத்து உதவினர்.

அது ஒரு சைனீஸ் படம். அதில் உள்ள ஸ்டிக் பைட் டை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தக் காட்சியை எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சியில் கமல் நடிக்கும்போது அவர் காட்டிய ஈடுபாடு முழுமையாக இருந்தது.

கயிற்றில் தொங்கியபடி அவர் செய்த சாகசங்கள் அபாரம். ஒரு முறை கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதையும் அவர் பொருட்படுத்தவில்லை.

Kamal, Silk in SV

5 சண்டைகள், 6 பாடல்கள் என படம் சக்கை போடு போட்டது. புலியூர் சரோஜாவின் நடன அமைப்பில் கமல் வெளு வெளு என்று வெளுத்தார். அனைத்து சென்டர்களிலும் படம் பிரமாதமாக ஓடியது. 11 தியேட்டர்களில் வெள்ளிவிழா கண்டது.

இந்தப்படத்தில் வரும் இளமை இதோ இதோ பாடலுக்கு முதலில் ஹேப்பி நியூ இயர் என்று சேர்க்கப்படவில்லை. அது புத்தாண்டு பாடல் என்றதும் பாடகர் எஸ்.பி.பி. பாடலின் ஆரம்பத்தில் ஹேப்பி நியூ இயர் என்று பாடினால் நன்றாக இருக்குமே என்று பாடினார். அது அருமையாக அமைந்தது.

இன்றும் ஆண்டுதோறும் பிறக்கும் நியூ இயருக்கு இந்தப்பாடல் ரேடியோ, டிவியில் மறக்காமல் இடம்பிடிக்கிறது. இந்தப்படத்திற்கு பிறகு கமலுக்கு ஆக்ஷன் இமேஜ் அதிகமாகியது. காஸ்டியூம் டிசைன் செய்தவர் வாணி கமல்ஹாசன்.

படத்தில் கமல் அணிந்த ஆடைகள் பிரபலமாயின. இந்தப்படத்தை ஒட்டி ஜவுளிக்கடைகளில் எல்லாம் சகலகலாவல்லவன் படத்தில் இளமை இதோ இதோ பாடலுக்கு வரும் டிரஸ்சை குழந்தைகளுக்கு ஏற்ப வடிவமைத்து இருந்தார்கள்.

Related Articles
Next Story
Share it