விக்ரம் படம் பார்த்து மிரண்டு போன சல்மான் கான், சிரஞ்சீவி!.. பழைய நண்பர் கமலுக்கு ராஜ மரியாதை!..

இதுவரை இல்லாத அளவுக்கு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை உலகளவில் நடத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்றைய வசூலையும் சேர்த்தால் 300 கோடி ரூபாயை நெருங்கி விடும் என்றே பலரும் கணித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை கடந்துள்ள கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் கேரளாவில் 30 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவை சேர்த்து 20 கோடி வசூலை இதுவரை விக்ரம் படம் எட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் புள்ளி விவரங்களுடன் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் ஹைதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டுக்கே நேரடியாக நேற்று இரவு சென்று விக்ரம் படத்தை போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
படத்தைப் பார்த்து மிரண்டு போன மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு பொன்னாடை போர்த்தி ராஜமரியாதை செலுத்தி உள்ள புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
மெகாஸ்டார் சிரஞ்சீவி மட்டுமின்றி பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கானும் விக்ரம் படத்தை பார்த்து வியந்து பாராட்டி இருக்கிறார்.
மலையாள நடிகர் மோகன்லாலின் லூசிஃபர் படத்தின் ரீமேக் படமான காட்ஃபாதர் படத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து சல்மான் கான் நடித்து வரும் நிலையில், தான் சல்மான் கானும் சிரஞ்சீவி வீட்டிலேயே விக்ரம் படத்தை பார்த்துள்ளார்.
அந்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ள நடிகர் சிரஞ்சீவி தானும் நடிகர் சல்மான் கானும் விக்ரம் படத்தை பார்த்து மெய்சிலிர்த்து போனோம். என்னுடைய பழைய நண்பர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உலகளவில் வசூல் வேட்டையை விக்ரம் படம் நடத்தி வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.