புதிய தமிழ் படத்தில் ஒப்பந்தமான சமந்தா... ஹீரோ யார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது தமிழை விட பிற மொழி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தி பேமிலி மேன் வெப் தொடருக்கு பின்னர் சமந்தாவிற்கு பாலிவுட்டில் மற்றும் ஹாலிவுட்டில் இருந்தெல்லாம் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதனால் சமந்தா இனி தமிழில் நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் ஏங்கி இருந்தனர்.
இந்நிலையில் சமந்தா புதிதாக நடிக்க உள்ள தமிழ் படம் குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. தமிழில் தற்போது சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளாராம்.
அதன்படி பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நடிகர் கார்த்தி தற்போது சர்தார் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பின்னர் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளாராம்.
தற்போது இந்தப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் இறுதியாக சமந்தாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராக உள்ளதால் சமந்தா பொருத்தமாக இருப்பார் என படக்குழுவினர் நினைக்கிறார்களாம். ஏனெனில் சமந்தாவிற்கு தெலுங்கில் நற் நல்ல மார்க்கெட் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.